ADVERTISEMENT

மத்தியக்குழுவினரின் காலில் விழுந்து தங்களின் நிலைமைகளை எடுத்துக்கூறிய விவசாயி!

04:05 PM Nov 27, 2018 | selvakumar


கஜா புயலால் பாதிக்கபட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை மத்திய குழு மூன்றுநாள் பயணமாக பார்வையிட்டது. அவர்களிடம் பொதுமக்களும் , விவசாயிகளும் தங்களது குறைகளை கொட்டினர். நாகையை அடுத்துள்ள பெரிய குத்தகையை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன் மத்தியக்குழுவினரின் காலில் விழுந்து தங்களின் நிலைமைகளை எடுத்துக்கூறினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் புயல் பாதிப்புகளால் ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடு செய்யும் வகையில், பேரிடர் நிவாரண நிதிவரையறைகளை மாற்றியமைக்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாகைக்கு வந்த மத்தியக்குழுவிடம் மனு அளித்துள்ளார் ஆறுபாதி கல்யாணம்.

ADVERTISEMENT

அந்த மனுவில் ,’’ தானே புயல் சீற்றத்தை விட 10 மடங்கு அதிகமான சேதத்தை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களின் தென்பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், மக்களின் 25 ஆண்டு கால உழைப்பையும் அழித்தொழித்துவிட்டது.

கஜா புயல்சீற்றம்.புயல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளைக்கட்டித் தரவேண்டும். விளைப் பயிர்கள்இழப்புக்காக அரசு அறிவித்துள்ள நிவாரணம், எந்த நஷ்டத்தையும் ஈடு செய்வதாக இல்லை. சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் இழப்பீடு அளித்ததைப் போலவே, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

14-ஆவது மானியக் குழு பரிந்துரைப்படி, 2015- ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான நிவாரண நிதியாக ரூ. 61,220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுப்படி, தமிழகத்துக்கான 5 ஆண்டு கால பேரிடர் நிவாரண நிதி ரூ. 3,751 கோடி மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த பரப்பில் 58.6 சதவீத பரப்பு பூகம்பத்தால் பாதிக்கப்படக் கூடியவை எனவும், 68 சதவீத பரப்பிலான விளை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படக் கூடியவை எனவும், சுமார் 40 மில்லியன் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளம் மற்றும் ஆறுகளின் அரிப்பால் பாதிக்கப்படக் கூடியவை எனவும், 7,517 கி.மீ கடற்கரைப் பகுதிகளில் 5,700 கி.மீ கடற்கரைப் பகுதிகள் சுனாமி மற்றும் புயலால் பாதிக்கப்படக் கூடியவை எனவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான பேரிடர் நிவாரண நிதியை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடியாக நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் வகையில், பேரிடர் நிவாரண நிதி வரையறைகளை மாற்றியமைக்கவும், குளறுபடிகள் நிறைந்ததாக உள்ள பிரதமரின் பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலான வரையறைகள் உருவாக்கப்படும் வரை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை அரசே நேரடியாக ஈடு செய்ய வேண்டும் எனவும் மத்தியக் குழு, பிரதமரிடம் பரிந்துரைக்க வேண்டும்’’ என அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT