Skip to main content

தமிழ்நாட்டினுடைய வளமான பாதிநாடு அழிந்துவிட்டது - சீமான் வேதனை

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
Gaja-Cyclone-Seeman



நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசியது:- 
 

பேரழிவிலும் பேரழிவு இது. கிட்டதட்ட எங்க நாட்டில் பாதி நாடு அழிந்துபோய்விட்டது. என் மண் மரணித்துவிட்டது. செத்துவிட்டது. ஒன்றுகூட கிடையாது. காவிரியில் தண்ணீர் வராமல் மாற்று பயிறுக்கு போக வேண்டும் என்றுதான் தென்னையை நம்பி பாட்டன் வைத்த மரம். 15 ஆண்டு, 20 ஆண்டு, 50 ஆண்டு, 80 ஆண்டு மரங்கள் எல்லாம் போய்விட்டது. ஆயிரம் மரம் இருந்த தோப்பில் ஒரு மரம் கூட மிஞ்சவில்லை. 
 

உண்மையாக யாரும் வந்து பார்வையிட்டு மதிப்பீடுகளை சொல்லவேயில்லை. இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை, ஒரு லட்சம் மரம் என்கிறது அரசு. கோடிக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கிறது. யாரும் போய் மக்களை சந்திக்கவில்லை. எந்த இடத்திற்கும் போனாலும் யாரும் வரவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மெழுகுவர்த்திக்கூட கிடைக்கவில்லை. உணவு இல்லை. யாராவது வந்து கொடுத்தால்தான் சாப்பாடு என்கிறார்கள். இந்த அளவுக்கு மக்களை தவிக்கவிட்டுள்ளார்கள்.
 

மத்திய அரசு இதனை ஒரு பொருட்டடாகவே நினைக்கவில்லை. ஒரு பேரிடராகவே பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை, மக்களை அதிகாரிகள் வந்து சந்திக்கவில்லை. அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை. தாங்க முடியாத துயத்தோடு, கொந்தளிப்போடு மக்கள் நிற்கிறார்கள். காரணம் என்ன? எங்களை கைவிட்டுவிட்டது அரசு, வந்து பார்க்கவில்லை என்கிறார்கள். 
 

கவலையான முகத்தோடு, கண்ணீரோடு நமது அம்மா, அம்மாச்சி வயதில் உள்ளவர்கள் கையெடுத்து கும்மிட்டு, எங்களுக்கு எதுவுமே இல்லை, தெருவுல நிற்கிறோமுன்னு கண்ணீரோடு அவர்கள் சொல்லும்போது வரும் வலி சொல்ல முடியாது. 
 

பெரிய பெரிய தோப்பை இழந்துவிட்டு அந்த துயத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறார்கள். தோப்புக்காரங்களுக்கான வாழ்க்கை மட்டுமல்ல, தேங்காய் வெட்டுபவர்கள், தேங்காயை பிரித்து எடுப்பவர்கள், நாரை பிரித்து எடுப்பவர்கள், கீத்து பின்னுபவர்கள் என எத்தனை பேருடைய வாழ்வாதாரம் அழிந்து விட்டது. 
 

7 மாவட்டங்கள் என்றால்... தமிழ்நாட்டினுடைய வளமான பாதிநாடு அழிந்துவிட்டது. மத்திய அரசு இதனை இழப்பாகவே கருதவில்லை. இதில் அவர்களுக்கு ஜி.எஸ்.டி. வேற கட்ட வேண்டும். வாயிக்கும் வயித்துக்கும் கஞ்சியில்ல, கட்டுவதற்கு மாத்து துணியில்ல... எப்படி வரி கட்டுவான்?. வேளாண் குடிமக்கள் பெற்ற கடனையெல்லாம் ரத்து செய்ய வேண்டும்.
 

ஈழத்தில் போர் நடந்த இடத்தில் எப்படி மீள்குடியேற்றம் நடந்தது. அதைப்போல ஒரு பொட்டக்காட்டில் மீள்குடியேறுவது போலத்தான். அதைப்போலவேதான் இங்க நீரால், புயலால் ஒரு பேரழிவு. மறுபடியும் போய் குடியேறுவதுபோலத்தான். அந்த மீள்குடியேற்றத்திற்கு என்ன நிவாரணம் அறிவித்திருக்கிறீர்கள்?. ஒரு தென்னை மரத்திற்கு ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு தோப்புக்காரர்களுக்கும் விழுந்து கிடக்கும் மரங்களை வண்டியில் ஏற்றவே லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். 
 

நேர்மையான, தூய்மையான மனதுடன் வந்து ஆய்வு செய்து உரிய பாதிப்பை வெளியில் சொல்லி உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுத்து இந்த மக்கள் மீண்டு வருதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இனிமேல்தான் பின் விளைவே இருக்கிறது. இந்த மரங்களின் மூலமாக வரும் வருமானத்தை வைத்துத்தான் எல்லா கனவும் கண்டிருப்பான் விவசாயி. இப்போது வாங்கிய கடனை கட்ட முடியாமல், பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், பெண் பிள்ளைகளை கட்டிக்கொடுக்க முடியாமல் தவிக்கப்போகிறார்கள். இந்த அளவுக்கு நம் மக்களை தவிக்க விடாமல் தமிழக அரசு மக்களை காப்பாற்ற வேண்டும். இதுதான் எங்களது கோரிக்கை என வேதனையுடன் கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்