Skip to main content

நிவாரணம் தேடிய 4 பெண்கள் விபத்தில் சாவு: அரசே பொறுப்பேற்க வேண்டும்! ராமதாஸ்

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
accident



நாகை அருகே நீர்முளை என்ற இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் விபத்தில் பலியானதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி பாசன மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலுக்கு ஏற்கனவே 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த சோகம் மக்களைத் தாக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம்  நீர்முளை என்ற இடத்தில் புயலால் வீடுகளை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மக்கள் மீது வாகனம் மோதியதில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
 

கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.  உட்புற கிராமங்களில் அரசு சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படாத நிலையில் பள்ளிகள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோவில்களில் அந்தந்த பகுதி மக்கள் தாங்களாகவே தற்காலிக முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர். ஆனால், அவர்களை அமைச்சர்களோ, அதிகாரிகளோ சென்று பார்க்கவில்லை. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட எந்த உதவியும் வழங்கப்படவும் இல்லை. அதனால் பட்டினியில் வாடும் மக்கள்  ஏதேனும் உணவு உள்ளிட்ட உதவிகள் கிடைக்காதா? என்ற தேடலில் சாலைகளில் காத்திருக்கின்றனர்.
 

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம்  நீர்முளை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் நிவாரண உதவிக்காக காத்திருந்த அப்பகுதி மக்கள் மீது நேற்றிரவு 9 மணியளவில் அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் சுமதி, அமுதா, ராஜகுமாரி என்ற 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரோஜா என்ற பெண் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில் அங்கு தீவிர மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்தார். இவ்விபத்தில் கால் முறிந்த மணிகண்டன் என்ற சிறுவன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

கஜா புயலால் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட  அடிப்படைத் தேவைகளை வழங்கியிருந்தால் பாசன மாவட்டங்களில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அடிப்படைத் தேவைகளைக் கூட அரசு நிறைவேற்றாததால் தான் மக்கள் உணவு தேடி சாலைகளுக்கு வந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதனால் நீர்முளை கிராமத்தில் நான்கு பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக  ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
 

இனிவரும் நாட்களிலாவது இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும். உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிகண்டனுக்கு சிறப்பான மருத்துவம் அளிப்பதுடன் வாழ்வாதார உதவியாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்