Skip to main content

ஹெலிகாப்டரில்தான் போய் பாப்பீங்களோ...? நடந்து போங்க... - தங்க தமிழ்ச்செல்வன் காட்டம்

Published on 21/11/2018 | Edited on 22/11/2018
Thanga Tamil Selvan



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிடுகின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்றும், குறிப்பாக தினகரன் கட்சியினரே காரணம் என்றும் ஆளும்கட்சியினர் கூறுகிறார்கள். இதுதொடர்பாக அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டோம். 
 

ஐந்து நாள் கழித்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்க சென்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகை மற்றும் திருவாரூரை பார்வையிடாமல் வானிலையை காரணம் காட்டி திரும்பினார். அந்த இடங்களை பார்க்காமலேயே பிரதமரை சந்திக்கிறாரே?
 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் ரேஞ்ச் என்ன உங்கள் ரேஞ்ச் என்ன?. இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் பொதுச்செயலாளர் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
 

இவ்வளவு பெரிய பாதிப்பு 6 மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை, கரெண்ட் இல்லை, கொசுவத்தி இல்லை, 50க்கும் மேலான உயிர்கள் பலியாகி இருக்கிறது. நிறைய கால்நடைகள் இறந்துள்ளது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 

சாதாரண குடும்பத்தில் இருந்துதானே வந்தார் எடப்பாடி. கட்சியில் ஆரம்பத்தில் இருந்து படிப்படியாகத்தானே வந்தார். உண்மையிலேயே பெரிய மனுஷனாக இருந்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு காரில் போய் இறங்கி, கார் போக முடியாத இடத்திற்கு நடந்தே சென்றிருக்க வேண்டும். ஒரு நாள் முழுக்க நடந்து சென்றிருக்க வேண்டும். மக்களை சந்தித்து பேசியிருக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை கேட்டிருக்க வேண்டும். 
 

எடப்பாடி நடந்து போக வேண்டும். என்ன பயமா? மக்களை சந்திக்க பயமா? வெதர் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லுகிறார். ஹெலிகாப்டரில்தான் போய் பாப்பீங்களோ...? 
 

ஒவ்வொரு மாவட்டமாக டெய்லி காலையில ரெண்டு மணிநேரம் நடங்க, சாயங்காலம் ரெண்டு மணி நேரம் நடங்க. அதிகாரிகள் பூரா உங்க பின்னால வருவாங்க, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
 

பக்கத்து மாவட்டத்தில் இருக்கிற ஓட்டல்களில் இருந்து சாப்பாடு சப்ளை செய்ய சொல்லலாம். முதல் அமைச்சர் சொன்னா கேட்க மாட்டாங்களா? குடிக்க தண்ணீர் கொடுக்க சொன்னா கொடுக்க மாட்டாங்களா? இதையெல்லாம் செய்யாமல், நான் பிரதமரை பார்க்கப் போறேன். ஆயிரம் கோடி ஒதுக்கிவிட்டேன் என்கிறார். இவர்கள் செயல்பாட்டை மக்கள் ரசிக்கவில்லை. கடும் கோபத்தில் உள்ளனர். 
 

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள உட்கிராமங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. பல கிராமங்களில் அரசு அதிகாரிகள் செல்லவில்லை. மக்கள் ரொம்ப தவிக்கிறார்கள். 
 

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார். அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களை சந்தித்தார். அவர்களை மக்கள் விரட்டினார்களா? அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிறார்களே ஏன்?

 

eps-ops-gaja


 

பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் குறிப்பாக டிடிவி தினகரன் கட்சியினர்தான் அமைச்சர்கள் பார்வையிடுவதை எதிர்க்கிறார்கள். முற்றுகையிடுகிறார்கள் என்று அதிமுகவின் முன்னணி தலைவர்கள் சொல்கிறார்களே?
 

 

எங்களுக்கு எதிர்க்கனும் என்று என்ன தேவை இருக்கிறது. உங்களை சீண்டினால் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. இது தவறான கருத்து. இது தவறான முன்னுதாரணம். தூண்டுகிறார்கள் என்று இவர்கள் இப்படி பேசுவதே தவறு.
 

ஆளும் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல் அமைச்சர் மக்களை சந்திக்க வேண்டும். மக்களை இவர்கள் சந்திக்க பயப்படுகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்துமே தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்கள். டெல்டா பகுதிகளில் 15 எண்ணெய் கிணறு தோண்ட அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதனால் 10 லட்சம் ஏக்கர் வயல் போகிறது. அதனை எதிர்த்து இந்த அரசு ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா? 
 

அந்த கோபத்தின் வெளிப்பாடு இப்போது வருகிறது. திடீரென்று வரவில்லை. எண்ணெய் கிணறுக்கு அனுமதி கொடுத்தது தவறு. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது தவறு என்று மக்கள் நெடுநாளாக கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் புயல் தாக்குதலுக்குப் பின்னரும் இவர்கள் செயல்பாடு மந்தமாக இருந்ததால் மக்களின் கோபம் அதிகரித்துவிட்டது. 


சுனாமி வந்தப்ப ஜெயலலிதா நாகப்பட்டிணத்திற்கு காரில் சென்றார். மூன்று முறை சென்றதோடு மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஒவ்வொரு வார்டாக பார்த்தார். எம்ஜிஆர் புயல் தாக்கிய பகுதிகளில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சென்று மக்களை பார்த்தார்.
 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவா இந்த முதல் அமைச்சர் பெரிய தலைவர். மக்கள் இவர்களை ரசிக்கவில்லை. வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது வேஷம் வரும் தேர்தலில் கலையும். 
 

 


 

சார்ந்த செய்திகள்