Skip to main content

சாய்ந்த மரம் அப்படியே கிடக்குது... துர்நாற்றம் வீசி கொசு கடிக்குது... எடப்பாடி வரார்னு புது ரோடா? கொதிக்கும் மக்கள்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
gaja storm



புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளையார்குளம் என்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். 
 

இந்த இரண்டு கிலோ மீட்டர் வழிநெடுக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென அந்த வழியில் மக்கள் நெருங்கிவிட முடியாதபடியும், மறியல் மற்றும் போராட்டம் எதுவும் செய்துவிடகூடாது என்பதில் போலீசாரும், அதிகாரிகளும் குறியாக இருந்தனர். 
 

மாப்பிள்ளையார்குளத்தில் வீடு ஒன்றின் மீது மரம் சாய்ந்து கிடந்தது. அதனை பார்வையிட்டார். இந்த தெருவில் உள்ளவர்களை போலீசார் முன்கூட்டியே அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர். மற்றப்பகுதிகளில் இருந்தும் மக்கள் யாரும் வர முடியாதபடி போலீசார் தீவிர கெடுபிடியாக இருந்தனர். பழனிசாமி நடந்து வந்த தெருவில் இருபக்கமும் மொத்தமான கயிறு கட்டப்பட்டு யாரும் நெருங்க விட முடியாதபடி போலீசார் அமைத்திருந்தனர். மாப்பிள்ளையார்குளத்தில் இருந்து புறப்பட்ட அவர், பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்திற்கு சென்றார். 
 

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் வழியில் நேற்று இரவு அவசர அவசரமாக சாலை போடப்பட்டது. அப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில்கூட துப்புறவு பணியாளர்களை வைத்து அவசர அவசரமாக சுத்தம் செய்யப்பட்டன. இதற்கும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மரங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. குப்பைகள் அகற்றப்படவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. கொசு கடிக்கிறது. சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அந்த இடங்களைவிட்டுவிட்டு, முதல் அமைச்சரின் வருகைக்காக அவர் வரும் வழித்தடங்களில் மட்டும் அவசரம் அவசரமாக சுத்தம் செய்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்களையோ, குப்பைகளையோ அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர். 

 

 

சார்ந்த செய்திகள்