Skip to main content

கடனைக் காரணம் காட்டி கஜா இழப்பீடு பறிப்பு: வங்கிகள் மீது நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
gaja storm




கடனைக் காரணம் காட்டி கஜா புயலுக்கான இழப்பீடு தொகையை பறித்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை, காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகள் முடக்கி வைத்துள்ளன. கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களிடம் வங்கிகள் கெடுபிடி காட்டுவது கண்டிக்கத்தக்கது.
 

 

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் சிதைத்திருக்கிறது.  வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள், வாழ்வதற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு  இருக்கிறார்கள். சேதமடைந்த வீடுகளை சரி செய்வதற்கே லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.10,000 மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படியே அந்தத் தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


 

ஆனால், ஏற்கனவே பயிர்க்கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள இந்தத் தொகையை வங்கி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. பயிர்க்கடன்,  கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்ததாதால், நிலுவைத் தொகை அதிகரித்து விட்டதாகவும், அதை செலுத்தாத வரையில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட ரூ.10,000 பணத்தை எடுக்க அனுமதிக்க முடியாது என்று காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள சில பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள்  கூறியுள்ளனர். சில வங்கிக் கிளைகளில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கியிருந்த பயிர்க்கடன் - கல்விக்கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

 

 

நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வங்கி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்சிக்கல் தீர்வதாக தெரியவில்லை. பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு செயல்படாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கையில் பணமின்றி, அடுத்த வேலை உணவுக்குக் கூட வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை நரகமாக கழிகிறது.

 

 

அரசின் சார்பில் வழங்கப்படும் உதவியைக் கொண்டு தான் சேதமடைந்த வீட்டின் ஒரு பகுதியையாவது சீரமைத்து வெயில் மற்றும் மழையிலிருந்து தற்காலிகமாகவாவது தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், வங்கிகளின் கெடுபிடியால் எதையும் செய்ய முடியாமல், கஜா புயல் தாக்கிய போது எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் தான் இப்போதும் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் உள்ளனர். அரசு வழங்கிய அரைகுறை உதவியும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.

 

 

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனாக இருந்தாலும், மாணவர்களுக்காக பெறப்பட்ட கல்விக் கடனாக  இருந்தாலும், அவை அரசால் தள்ளுபடி செய்யப்படாத பட்சத்தில் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில் யாருக்கும், எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், புயலால்  அனைத்தையும் இழந்து விட்டு, ஒருவேளை உணவுக்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு கிடைத்த பணத்தை வங்கிகள் பறிக்கத் துடிப்பது இரக்கமற்ற கொடிய செயலாகும். கந்துவட்டிக் காரர்கள் கூட இந்த அளவுக்கு மனிதாபிமானமில்லாமல் இருக்க மாட்டார்கள். எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பது எவ்வளவு கொடூரமான அணுகுமுறையோ, அதே அளவு கொடிய அணுகுமுறை தான் இதுவும்.

 

 

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக வழங்கப்பட்ட தொகை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சற்றும் இரக்கமின்றி,  அப்பாவி மக்களின் பணத்தை தர மறுத்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.