Advertisment

கஜா புயல் நிவாரணம் அறிவித்த பள்ளி ஆசிரியர் கடத்தல்- இரண்டு பேர் கைது

m

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (30). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

வாழப்பாடி அடுத்த அய்யாகவுண்டர் காடு பகுதியில் மணிகண்டன் தனது மனைவி, 2 வயது குழந்தையுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் (டிச. 7) மாலை, பள்ளியில் இருந்து நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற மணிகண்டனை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.

Advertisment

அவரை சேலத்தில் இருந்து தஞ்சாவூருக்குக் கடத்திச்சென்றனர். மேலும், அந்த கும்பல் மணிகண்டனின் தந்தை ராஜேந்திரனிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். இதையடுத்து, பணத்தைக் கொடுக்கச் சென்ற ராஜேந்திரனை பின்தொடர்ந்த போலீசார், கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். இதில், 2 பேர் சிக்கினர். 3 பேர் தப்பி ஓடினர்.

பிடிபட்ட நபர்களிடம் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் பேராவூரணியைச் சேர்ந்த மகேஷ் (21) என்பதும், மற்றொருவர் தேனியைச் சேர்ந்த வீரா என்கிற ஜெயவீரன் (22) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ஆசிரியர் மணிகண்டன், கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் பதிவிட்டிருந்தார். இதை அவருடைய ஊர் அருகே வசித்து வரும் மணியரசன், மகேஷ் ஆகியோர் பார்த்துள்ளனர்.

அவர்கள் தேனியைச் சேர்ந்த ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வீரா உள்ளிட்ட மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனை கடத்த திட்டமிட்டனர். இதன்படி வாழப்பாடிக்கு வந்து கஜா புயலுக்காக நிவாரண பொருள்களை திரட்டுகிறோம் என மணிகண்டனிடம் செல்போனில் பேசியுள்ளனர். அவரும் தன் பங்கிற்கு நிவாரண பொருள்களை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, பள்ளியில் இருந்து வெளியே வந்து சில பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அப்போது செல்போனில் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, அவரை காரின் அருகே அழைத்துச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அந்த கும்பல் காருக்குள் தள்ளி கடத்திச் சென்றது. தஞ்சாவூருக்கு சென்றதும், அவருடைய தந்தை ராஜேந்திரனிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிப்போம் என மிரட்டினர். பயந்துபோன ராஜேந்திரனும் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால் அவர் 1.50 லட்சம் மட்டுமே கொண்டு சென்றதால், மணிகண்டன் அணிந்திருந்த 3 பவுன் செயின், 3 பவுன் காப்பு ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில் போலீசார் மற்றும் ஊர்க்காரர்கள் சுற்றி வளைக்கவும், கார், பணத்தைப் போட்டுவிட்டு 3 பவுன் காப்புடன் தப்பி ஓடினர். பின்னர் மகேஷ், வீரா ஆகிய இருவர் மட்டும் சிக்கினர். இவ்வாறு போலீசார் கூறினர்.

ஆசிரியரை கடத்திய இந்த கும்பல், கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி, பணம் கேட்டு மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போதும் போலீசில் பிடிபட்ட இந்த கும்பல் மீது வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது ஆசிரியர் மணிகண்டனை கடத்தி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மணியரசன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Salem manikandan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe