/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/602_7.jpg)
“கசா” புயலால் ஏழு மாவட்டங்கள் தரைமட்டமாகியுள்ளன. தமிழ்நாடு அரசு வழங்குவது கண்துடைப்பு நிவாரணம் என்றும், முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
மேலும் அவர்,
“கசா” புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர் – நாகை மாவட்டப் பகுதிகளுக்கு நேற்று (20.11.2018), நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தை. செயபால், எல்லாளன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோரும் நேரில் சென்றோம்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் – தண்டலச்சேரி, கண்ணந்தங்குடி, வேளூர், திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும், தகட்டூர், வாய்மேடு, ஆயக்காரன்புலம் 1, 2, 3, கருப்பம்புலம், நெய்விளக்கு, வேதாரணியம் நகரம், கடினல்வயல் – உப்பளப் பகுதிகள் வரை சென்று பார்வையிட்டோம்.
“கசா” புயலால் திருத்துறைப்பூண்டி – வேதாரணியம் பகுதிகள், யாரும் கற்பனை செய்திட முடியாத பேரழிவில் சிக்கியுள்ளன. புயல் தாக்கிய ஏழு மாவட்டங்களிலும் இதேபோல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெருமழை - வெள்ளம் ஆகிய பாதிப்புக்கும், இந்தப் புயலின் பாதிப்புக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. பெருமழை – வெள்ளம் ஆகியவை உற்பத்திப் பொருட்களையும், மக்களின் உடனடி தேவைப் பொருட்களையும் அழிப்பதே அடிப்படையான சிக்கலாகும். ஆனால், இந்த “கசா” புயல் அது பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தையும் சமூகத்தின் பொதுக் கட்டமைப்புகளையும் தகர்த்து – வீழ்த்தியிருக்கிறது!
எனவே, நாகை – திருவாரூர் – தஞ்சை – புதுக்கோட்டை – இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உடனடியான துயர் நீக்கப் பணிகளும் தேவைப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அடிப்படைக் கட்டமைப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்டுக் கொடுப்பதற்கான தேவையும் இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசு “கசா” புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை “பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக” அறிவித்து, அதற்குரிய மீட்பு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அம்மக்களுக்கு இடர்நீக்க முகாம்கள் அமைப்பது, உணவு – குடிநீர் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நடவடிக்கைகள் அதன் தேவைக்கேற்ப நடத்தப்படாமல், ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு உடனடியான ஒரு மாதக் காலத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், உடை, கொசுவத்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை வழங்க வேண்டும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், கால்நடைகளும், பறவைகளும் கடல் வாழ் உயிரினங்களும் கரையில் வீசப்பட்டு அவை அழுகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவாமல் தடுப்பதற்கு, சுற்றுச்சூழலை தூய்மைப் படுத்துவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்றவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து, “கசா” புயல் பேரிடரில் சிக்கியுள்ள உழவர்கள், சிறு வணிகர்கள், தொழில் முனைவோர், மீனவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்வுத் தொழிலையும், இவ்வளவு நாள் பாடுபட்டு வளர்த்த மரப் பயிர்கள், கால்நடைகள், படகுகள் போன்ற தொழில் ஆதாரங்கள், வணிக நிறுவனக் கட்டடங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். நெற்பயிர்கள் சீறும் காற்றால் கிழிக்கப்பட்டதால், நைந்து போனப் பயிர்கள் அரிசிப் பிடிக்கும் ஆற்றல் இழந்து வெறும் பச்சை நிறத்தில் மட்டும் நிற்கின்றன. அவற்றிலிருந்து விளைச்சல் எதுவும் வராது.
எனவே, இந்த இழப்புகளை ஈடு செய்து அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வுத் தொழிலையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், இம்மாவட்ட மக்கள் மீள முடியாத பொருளியல் இழப்புக்கு ஆளாவார்கள்.
எனவே, தமிழ்நாடு அரசு, “துயர் துடைப்பு நிதி வழங்குவது” என்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாற வேண்டும். இழப்பை ஈடு செய்யவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீள் கட்டமைப்பு செய்து கொள்ளவும், உரிய இழப்பீடு வழங்கியாக வேண்டும்.
தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள “நிவாரணத் தொகை அறிவிப்பு” வழமையான அணுகுமுறையாகும். இது இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவோ, அடிப்படைக் கட்டமைப்புகளை மீட்கவோ பயன்படாது.
தமிழ்நாடு அரசு, தென்னை மரத்துக்கு 1100 ரூபாயும், நெற்பயிர் ஏக்கருக்கு 13,500 ரூபாயும், சேதமடைந்த படகுகளுக்கு 42,000 ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களின் இழப்பை மீட்டெடுக்கத் தேவையான தொகையில் 10 விழுக்காடுகூட இல்லை!
எடுத்துக்காட்டாக, தற்போது சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்கு தென்னை மரங்களை இழக்கும் உழவர்களுக்கு மரத்திற்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை நிலம் எடுப்பு சிக்கல் எழுந்ததையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் உரிமையாளர்களுக்கு 40,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தார். வீழ்ந்துள்ள தென்னை மரத்தை பயிர் செய்வதற்கு செய்யப்பட்ட செலவு, அது வாழும் காலம் முழுவதற்கும் உழவர்களுக்கு அதனால் கிடைக்கும் விளைச்சல், அவற்றை மறு உருவாக்கம் செய்யத் தேவையான தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதாகச் சொல்லித்தான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்தார். அதுவே போதுமானதில்லை என்ற திறனாய்வு உண்டு!
வலை, படகுகள் போன்றவற்றை முற்றிலுமோ, பகுதியளவிலோ இழந்த மீனவர்கள், வணிக நிறுவனக் கட்டமைப்புகளை இழந்த வணிகர்கள், தொழில் முனைவோர் போன்றவர்களின் இழந்த வாழ்வாதாரங்களை மீட்க வேண்டுமானால், இப்போது அறிவித்துள்ள தொகை எந்த வகையிலும் பொருத்தமில்லாதது!
இவ்வளவு பேரழிவுக்குப் பிறகும், நடப்பு மாதத்திற்கும் வரும் மூன்று மாதங்களுக்கும் உள்ள மின் கட்டணத்தை முழுவதுமாகத் தள்ளுபடி செய்வது என்ற ஞாயமான அணுகுமுறைக்கு மாறாக, இந்த மாத அபராதக் கட்டணத்தை மட்டும் தள்ளுபடி செய்வதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவித்திருப்பது பேரிழப்புக்கு ஆளான மக்களை கேலி செய்வது போல் உள்ளது.
அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை அணுகுமுறை மனிதநேயத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல, அறிவியல் கணக்கீடுகளுக்குப் பொருத்தமில்லாததும்கூட! இம்மக்கள் அரசுக்கு அளித்துவரும் வரி மற்றும் கட்டணங்களை கணக்கில் கொண்டால், இது அறிவியல் கணக்கீட்டிற்கு இது ஒவ்வாதது என்று தெரியவரும்.
எனவே, ஒரு தென்னை மரத்திற்கு ரூபாய் 50,000, நெற்பயிர் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30,000, அதேபோல் சோளம், காய்கறி போன்ற பயிர்களுக்கான முழு இழப்பீடு வழங்க வேண்டும். வாழை, கரும்பு, பிற மரப்பயிர்கள் ஆகியவற்றுக்கும் மேற்சொன்ன கணக்கீட்டின் அடிப்படையில் முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
மீன்பிடி படகுகள், வலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனக் கட்டமைப்புகள் போன்றவற்றிற்கு அவற்றின் முக மதிப்பில் குறைந்தது 75 விழுக்காட்டுத் தொகையாவது இழப்பீடாக வழங்க வேண்டும்.
மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கட்டமைப்புகள், சாலை சீரமைப்பு போன்றவற்றை “பேரிடர் பாதித்த பகுதிகள்” என்ற அவசர அணுகுமுறையோடு மீள் கட்டமைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தேவையான நிதியில் 75 விழுக்காட்டை இந்திய அரசே வழங்க வேண்டும்.
இன்னொருபுறம், ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியபோது செய்ததுபோல், மக்கள் இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் உடனடி மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்புச் செயல்களிலும், குடியிருப்புகள், படகுகள் ஆகியவற்றை மறு கட்டமைப்பது போன்ற பணிகளிலும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்ப மேற்சொன்ன ஏழு மாவட்டங்களில் ஈடுபட வேண்டும்.
இந்திய அரசு, பேரிடர் மானியங்கள் வழங்கியும், அரசு வங்கிகள் வட்டியில்லாக் கடன்கள் வழங்கியும் இந்த மீள் கட்டமைப்புப் பணியில் துணை செய்ய வேண்டும். பேரிடர் மாவட்டங்களில் வேளாண்மை, வணிகம், மீன்பிடித் தொழில் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
உடனடியாகத் துயர் துடைப்புப் பணிகள் நடக்காத ஆவேசத்தில் பொது மக்கள் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அமைதிப்படுத்தி, பணிகளை விரைவுபடுத்த வேண்டிய அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், வீடு புகுந்து கைது செய்வதும் கண்டனத்திற்குரியது! எனவே, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு, தனது அணுகுமுறையில் அடிப்படையான மாறுதல் செய்து கொண்டு செயல்படுவதும், மக்கள் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மக்களுக்குத் துணை நிற்பதும்தான் “கசா” புயலால் தரைமட்டமாகியுள்ள மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்கப் பயன்படும்! இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)