Skip to main content

கஜா புயலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
gaja storm



கஜா புயலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கஜா புயலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதாது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 10 லட்சம் நிவாரணத்துக்குப் பதிலாக, தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் பெரிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத்துக்குப் பதிலாக ரூ. 5 லட்சமும், சிறிய அளவிலான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ. ஒரு லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். 
 

கஜா புயலால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அடிப்படை வசதிகள் மக்களுக்கு மீண்டும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதோடு, மத்திய அரசு இந்த இக்கட்டான தருணத்தில் தமிழக அரசுக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு, தமிழகத்துக்கு தக்க உதவியை செய்ய வேண்டும்.
 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்.டி.பி..ஐ. கட்சியின் செயல்வீரர்கள், நிவாரணக் குழுக்களை அமைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமானத்தோடு நிவாரண உதவிகளை செய்து வருகின்றார்கள். அதற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கொடுத்த உறுதிமொழியை நினைவுப்படுத்துகிறேன். அதற்கான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை. மத்திய அரசு தனது உறுதிமொழியை செயல்படுத்தும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
 

தொடர்ந்து பேசிய அவர், “அம்பேத்கராலும் மற்ற சட்ட வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி விரைவில் நாடு தழுவிய அளவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கும். ஏனென்றால், இந்துத்துவா அமைப்புகள் அதற்கு எதிராக அச்சுறுத்தல் ஏற்படுத்தி, மனுஸ்மிருதியை நிலைநாட்ட முயல்கிறார்கள். மனுஸ்மிருதி தான் நமது அரசியல் சட்டம் என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த டீ விற்பனை செய்தவரான நரேந்திர மோடி, இந்த நாட்டில் பிரதமராக வந்திருக்க முடியாது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவுக்கு அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக இந்தியாவில் உள்ள சிறிய பெரிய அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒருவரோடு ஒருவர் கரம் கோர்க்க வேண்டும்.” என்றும் கேட்டுக் கொண்டார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்