Advertisment

கஜா புயல் பாதிப்பினால் குரூப்-2 முதன்மை தேர்வை முன்கூட்டியே நடத்தக்கூடாது! அன்புமணி ராமதாஸ்

ar

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:

Advertisment

’’தமிழ்நாடு முழுவதும் 2019-ஆம் ஆண்டு மே மாத மத்தியில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட குரூப்- 2 பணிகளில் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வுகள் நவம்பர் மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடர்ந்து மே மாதம் முதன்மைத் தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட வேண்டிய முடிவுகளை இரு மாதங்கள் முன்பாக கடந்த 17-ஆம் தேதியே வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், முதன்மைத் தேர்வுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட மூன்று மாதங்கள் முன்பாக வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு 3 மாதங்கள் ஆகும் நிலையில், இம்முறை ஒரு மாதம் ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது உண்மையாகவே பாராட்டத்தக்க செயல் தான். தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் முதன்மைத் தேர்வுகளை முன்னதாகவே நடத்துவதையும் குறை கூற முடியாது. இன்னும் கேட்டால் குரூப்&2 முதன்மைத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டால், அத்தேர்வுகளை முடித்து விட்டு, அடுத்தக்கட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே இயல்பான சூழலுக்கு மட்டும் தான் பொருந்தும். தமிழகத்தில் இப்போது இயல்பான நிலைமை நிலவவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

Advertisment

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16&ஆம் தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அதுமட்டுமின்றி, புயல் தாக்கி ஒன்றரை மாதங்களாகியும் இப்போது வரை பல கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்படாததால் அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.

கஜா புயல் தாக்கியதற்கு 5 நாட்கள் முன்பாகத்தான் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெற்றனர். கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு, தேர்வுக்குத் தயாராக அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டால் நிச்சயமாக முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையாக தேர்வுக்குத் தயாராகி, அதில் பங்கேற்று வெற்றி பெறுவது முக்கியமா? அல்லது தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது முக்கியமா? என்று கேட்டால் அனைவருக்கும் சமவாய்ப்புத் தத்துவத்தின்படி முதல் வாய்ப்புக்குத் தான் மதிப்பளிக்க வேண்டும்.

குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது; ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும். எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி, குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தில் நடத்தாமல் ஏற்கனவே அறிவித்திருந்தவாறு மே மாதத்தில் நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.’’

anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe