e

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment

அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார். ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 16, 2018) நடந்தது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. தாழ்வான பகுதிகள், குடிசை பகுதிகளில் வசிக்கும் 81948 பேரை அங்கிருந்து அகற்றி, 471 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கஜா புயலையொட்டி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. புயலால், நாகை மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால்தான் முன்கூட்டியே 7 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Advertisment

கஜா புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சேத மதிப்புகளை முழுமையாக கண்டறிந்து, அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காடம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 405 ஆம்புலன்ஸ்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கஜா புயலால் அதிகளவில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அகற்ற நவீன மர அறுவை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

களத்தில் உள்ள அவர்கள் அளிக்கும் தகவல்களை கேட்டறிந்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமதிப்புகளை கணக்கிட்ட பிறகு, நான் நேரில் அந்த இடங்களைப் பார்வையிட உள்ளேன்.

சேத மதிப்புகளை முழுமையாக கணக்கிட்டு, அதுகுறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, உரிய நிவாரண உதவி கோரப்படும். மேலும் ஒரு புயல் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ''இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் விரிவாக பேச முடியாது,'' என்றார்.