Skip to main content

கஜா புயல்.. இழப்பீடு - நிவாரணம் கிடைக்கும் வரை காத்திருப்போம்.. ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மக்கள்...

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
protest

 

நவம்பர் 16 ந் தேதி அதிகாலை கஜா என்னும் அரக்கன் ஆடிய கோரதாண்டவத்தால் அத்தனையும் அழிந்தது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்கள் விடியும் வரை காத்திருந்து விடிந்த பிறகு வெளியே பார்த்தால் செல்லமாய வளர்த்த பூ செடிகள் கூட மிஞ்சவில்லை மலை மலையாய் தென்னை மரங்களும், மா, பலா, தேக்கு மரங்களும் வீழ்ந்து கிடப்பதை பார்த்து மூச்சடைத்து நின்றனர். ஆறுதல் சொல்லி அவர்களுக்கு உணவும், உடையும் கொடுக்க வேண்டிய அரசு காலம் கடந்து வந்தது. தன்னார்வலர்கள் சோறு கொடுத்து பசியாற்றினார்கள். உள்ளூர் இளைஞர்கள் மரங்களாலும், மின்கம்பங்களாலும் மூடிக்கிடந்த சாலைகளையும், மின் வழிப்பாதைகளையும் சீரமைத்து புதிய பாதை அமைத்தார்கள். இளைஞர்கள் அமைத்த புதிய பாதையிலேயே சில நாட்களுக்கு பிறகு அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து பார்த்தார்கள், எல்லாம் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். ஒரு வாரம் அங்கேயே சுற்றினார்கள். அதன் பிறகு அந்த அதிகாரிகளை சுற்ற வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.


தோட்டங்களில் வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்ற நவீன கருவிகள் கொடுக்கவில்லை அரசு. விலைக்கு வாங்கி மரத்தை அறுக்கப் போகும் போது தென்னை கணக்கு எடுக்கணும் அலுவலகம் வாங்க என்று வரும் அழைப்பு. அங்கே போனால் மற்றொரு நாள் வாங்க என்று இப்படி பல நாள் இழுத்தடிப்பு பிறகு நிவாரணம் கொடுக்கிறேன் என்று ஊருக்குள் பாதிப் பேருக்கு கொடுத்துவிட்டு மீதிப் பேரை சாலைக்கு போராட அனுப்பினார்கள். மின்சாரம் கொடு என் குழந்தை படிக்கணும் என்று மக்கள் சாலைக்கு வந்தார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் போராடி, போராடி போராட்டங்களே வாழ்க்கையாகிப்போனது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. விவசாய கடன்களை ரத்து செய், கல்விக் கடனை ரத்து செய், மகளிர் சுயஉதவிக்குழு கடனை ரத்து செய் என்று மறு பக்கம் விவசாயிகள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.


இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஜனவரி 2 ந் தேதிக்குள் அனைவருக்கும் நிவாரணம், இழப்பீடு வழங்கவில்லை என்றால். அதை வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்போம் என்று அறிவித்தனர்.


இன்று ஜனவரி 2.. காலை முதலே விவசாயிகளும், பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திரண்டு காத்திருக்க தொடங்கிவிட்டனர். தென்னைக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு, மற்ற மரங்களுக்கு ரூ. 10 ஆயிரம், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு, விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் என்று கோரிக்கை பதாகைகளை பிடித்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள்.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஆயிரம் பேர் காத்திருந்தனர். மாலையில் பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்