Skip to main content

கஜா புயலால் படுபாதாளத்திற்கு போன மாங்காய் ஏற்றுமதி; கவலையில் வேதாரண்யம் விவசாயிகள்

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

கஜா புயல் பாதிப்பால், மாமரங்கள் அழிந்துபோனதால், மாங்கா ஏற்றுமதி பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இரண்டு கோடிக்கு மேல் மாங்காய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை கொள்கிறார்கள்.

 

mango

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில், பசுமை சோலையாக இருந்துவந்த புஷ்பவனம், செம்போடை, கத்தரிப்புலம், கருப்பம்புலம், நாலுவேதபதி வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி நடைபெறும்.  இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீளம், உருமேனியா, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை அப்பகுதி மக்கள் சாகுபடி செய்தனர். அப்பகுதி மக்களின் பிரதான வருமான தொழிலாகவும் இருந்தது. அவ்வளவு வாழ்வாதார பசுமையான மரங்களையும் கஜா புயல் தரைமட்டமாக்கி, அப்பகுதி மக்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.
 

சீசன் காலமான ஏப்ரல், மே, ஜூன், ஆகிய மூன்று மாத காலத்தில் சுமார் பத்தாயிரம் டன் மாங்காய், மாம்பழம் கேரளா, கர்நாடகா, மும்பை, உள்ளிட்ட மாநிலங்களுக்கும்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.  
 

சராசரியாக  சீசன் காலங்களில் ரூபாய் 40 முதல் 75 வரை இந்த வகை மாங்காய்கள் விற்பனையாகும்.  கஜா புயல் பாதிப்பால் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதனால் இந்த மாங்காய் சீசனில் வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. புயலில் தப்பிய ஒரு சில மரங்களே தற்போது காய்க்கின்றன. வேதாரண்யம் பகுதியில் நாளொன்றுக்கு 10 டன் மாங்கா ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உள்ளூர் தேவைக்கு கூட மாங்காய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. என்கிறார்கள் அப்பகுதியினர்.
 

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறும்போது, "வேதாரண்யம் பகுதியில் முன்பு நாளொன்றுக்கு 50 டன்வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து விட்டதால் நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 கிலோ மட்டுமே விற்பனைக்கு செல்கிறது.  ரூ 2 கோடி இப்பகுதியில் மாங்கா ஏற்றுமதியானது, இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாய் கூட இல்லை. இந்த பாதிப்பில் இருந்து மீண்டும் மாங்காய் உற்பத்தி துவங்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும்" என்கிறார் அவர் வேதனையுடன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

கிருஷ்ணகிரியில் 29வது மாங்கனி விழா துவக்கம்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Inauguration of 29th Mangani Festival at Krishnagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54,000 மீட்டர் பரப்பளவில் சுவை மிகுந்த மாங்கனிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாங்கனிகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத் துறை சார்பில் அகில இந்திய மாங்கனி விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரயு தலைமை வகித்துத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இன்று முதல் 25 நாட்கள் நடைபெறும் இந்த மாங்கனி கண்காட்சியில் மா போட்டி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்  கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 172 ரக மாங்கனிகள் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மாங்கனிகளால் உருவாக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் வண்ண மலர்களால் வண்ணத்துப்பூச்சி, ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் திருத்தேர், மற்றும் 14 வகை நறுமணப் பொருட்கள் கொண்ட யானை போன்றவை தயாரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்து தங்கள் செல்போன்களில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

 

Inauguration of 29th Mangani Festival at Krishnagiri

 

அரசுத்துறை சாதனை விளக்க அரங்குகள் மற்றும் தனியார் அரங்குகள் தின்பண்டங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சிகள், நாடக கலைஞர்களின் நாடகம், பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் 57 பயனாளிகளுக்கு 38 லட்சத்து 22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.