e

கஜா புயல் நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisment

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமையன்று (நவம்பர் 17, 2018) செய்தியாளர்களிடம் கூறியது:

Advertisment

கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 105 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நான் நேரில் சென்று பார்வையிடுகிறேன்.

Advertisment

வரலாற்றில் இல்லாத வகையில், புயல் வீசும் நேரத்திலும்கூட அமைச்சர்கள் அதே இடத்தில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டதால் பெரிய அளவு பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது.

நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. உணவுத்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. புயல் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிட்டு, பால், பால் பவுடர் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 203 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 1.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

புயலால் ஒரு லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. புயலால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கால்நடைகள், மான்கள் உள்ளிட்ட பிராணிகள் இறந்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடலோர மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இதுவரை 10 திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு உள்ளன. மேலும் 11 திட்டங்கள் விரைவில் சீர் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.