Advertisment

கெயில் எரிவாயு குழாய் பாதையை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது! அன்புமணி

gail-pipeline

Advertisment

கெயில் எரிவாயு குழாய் பாதையை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. மத்திய அரசின் ஆணைக்கு பணிந்து, விளைநிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு துணைபோனால் அதற்கு எதிராக உழவர்கள் மத்தியில் வரலாறு காணாத எழுச்சி உண்டாகி, அது போராட்டமாக வெடிக்கும் என்று கூறியுள்ளார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் மங்களூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்கானத் திட்டம் அடுத்த 30 மாதங்களில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார். உழவர்களின் நலன்களை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

கெயில் நிறுவனம் அமைக்கவுள்ள இந்த எரிவாயுக் குழாய் பாதை தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நாசகாரத் திட்டம் என்பதால் இதற்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்ட இரட்டை நிலையால் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் விவசாயிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், உழவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை கெயில் நிறுவனத்தால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படக் கூடாது என்பது விவசாயிகளின் நிலை அல்ல. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையோரங்களில் இந்த குழாய்களை பதிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உழவர்களின் நிலை ஆகும். கேரளத்திலும், கர்நாடகத்திலும் எரிவாயுக் குழாய் பாதைகள் சாலையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் விளைநிலங்களில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம் புரியவில்லை. கொச்சியிலிருந்து சாலையோரமாகவே குழாய்களை புதைக்கலாம் என பல்வேறு தரப்பிலும் யோசனைகள் தெரிவிக்கப்பட்ட பிறகும், அதற்கான சாத்தியங்கள் என்பது குறித்து ஆய்வு கூட செய்யாமல், வேதாளம் மீண்டும், மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப் போன்று விளைநிலங்களின் வழியாகத் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு மீண்டும், மீண்டும் கூறுவதை ஏற்க முடியாது. உழவர்களின் நலன்களில் மத்திய அரசுக்கு சிறிதளவு கூட அக்கறை இல்லை என்பதைத் தான் இந்த விஷயத்தில் அதன் செயல்பாடுகள் உறுதி செய்கின்றன.

கெயில் எரிவாயுத் திட்டத்தை விளை நிலங்களின் வழியாக செயல்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. இத்திட்டத்திற்காக 5,842 விவசாயிகளுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலங்களுக்கு ரூ.3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எந்த வகையில் போதுமானதாக இருக்கும் என்பதையோ, இதுகுறித்து விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் விருப்பங்களை அறிந்து தீர்வு காணலாம் என்பதையோ மத்திய அரசு நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 310 கி.மீ. தொலைவுக்கு 20 மீட்டர் அகலத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் இத்திட்டத்தால் லட்சக்கணக்கான மா, பலா, தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும். குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டும் பகுதிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழவகை மரங்களை வெட்ட வேண்டியதிருக்கும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 மரங்களையாவது நட வேண்டும். அதன்படி, 12 லட்சம் மரங்களை நடுவது கெயில் நிறுவனத்தால் சாத்தியமில்லாத ஒன்று என்ற நிலையில், விவசாயத்தையும், சுற்றுசூழலையும் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை கெயில் நிறுவனம் ஆராய்வது தான் ஆக்கப்பூர்வமான செயலாக அமையும்.

இதுகுறித்தெல்லாம் ஆராயாமல் மத்திய அரசின் ஆணைக்கு பணிந்து, விளைநிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு துணைபோனால் அதற்கு எதிராக உழவர்கள் மத்தியில் வரலாறு காணாத எழுச்சி உண்டாகி, அது போராட்டமாக வெடிக்கும். அதற்கு வழிவகுக்காமல், விளைநிலங்களின் வழியாக குழாய் பாதைகளை அமைக்கும் திட்டத்தை கை விட்டு, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்; தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tamil Nadu government should not be allowed Central Government agricultural lands gail-pipeline
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe