ADVERTISEMENT

அனில் அகர்வாலுக்காக சொந்த மாநில மக்களை அடகு வைக்கும் தமிழக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது -  பாப்புலர் ஃப்ரண்ட் 

06:13 PM Mar 27, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

ADVERTISEMENT


’’வேதாந்தம் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை முதன் முதலாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தின கிரியில் அமைக்க திட்டமிட்டு வேலைகள் நடந்தன. இதன் ஆபத்தை உணர்ந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீட்டில் வைத்திருந்த கோடாரிகளை எடுத்து சென்று ஆலையை இடித்து தரைமட்டமாக்கினர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அங்கு அமைக்க மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் சரத்பவார் தடை விதித்தார். பின்பு வேதாந்தம் குழுமம் இந்த ஆலையை அமைக்க குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் முயற்சி எடுத்தது. அந்த மாநில அரசுகள் இந்த ஆலையினால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததால் அனுமதி அளிக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் முயற்சி பலிக்காததால் தூத்துக்குடி குமரெட்டியார்புரத்தை தேர்வு செய்து பல்வேறு தகிடுதத்தங்களில் ஈடுபட்டு தமிழக அரசிடம் அனுமதி பெற்றனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலை தூத்துக்குடியின் உருவத்தையே மாற்றி விட்டது. 1997ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையின் உலை ஒன்று வெடித்து அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர். ஆனால் இந்த உலை வெடிப்புக்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது குற்றச்சாட்டை சுமத்தி விட்டு ஆலை நிர்வாகம் தப்பித்துக் கொண்டது.



2013ம் ஆண்டில் இந்த ஆலையில் இருந்து வரும் நச்சுக்கசிவால் பல மக்கள் இன்னலுக்கு உள்ளாகியதை தொடர்ந்து ஆலையை இழுத்து மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டார். இதை தொடந்து உச்சநீதி மன்றத்தை அணுகிய ஆலை நிர்வாகம் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டி மீண்டும் ஆலையை திறந்தது.

இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது.1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டால் 2400 கிலோ கந்தக டை ஆக்ஸைடு வெளியேற்றப்படும். இந்த கந்தக டை ஆக்ஸைடு தூத்துக்குடியின் அனைத்து வளத்தையும் கெடுத்து தூத்துக்குடியை மற்றொரு போபாலாக மாற்றி வருகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் புற்றுநோய் உட்பட பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் முதலாளிக்காக சொந்த மாநில மக்களை அடகு வைக்கும் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் கண்டிக்கத் தக்கது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆலையை விரிவாக்கம் செய்ய அளித்த அனுமதியை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்கே நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT