
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும், பி.ஆர்.ஓ.,க்கள் மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை போலீசார் ரகசியமாக விசாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை அரசிடம் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செய்தி மக்கள் தொடர்புத்துறையில், தி.மு.க. ஆதரவு பி.ஆர்.ஓ., ஏ.பி.ஆர்.ஓ.,க்களுக்கு டிரான்ஸ்பர், புரோமோசன் உள்ளிட்டவைகளில் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர், பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்கள் மீது பழிவாங்கும் நோக்குடன் நடந்து கொள்வதாகவும், அ.தி.மு.க. ஆதரவு பி.ஆர்.ஓ.க்கள், ஏ.பி.ஆர்.ஓ.,க்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் சிபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் புகார் எழுந்தது.
வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம் வெளியிட்டதில் இவர் பல கோடி கமிஷன் பெற்றதாகவும், முன்னாள் கூடுதல் இயக்குநர் எழிலழகனின் உத்தரவிற்கிணங்க செயல்படுவதாவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது. இது குறித்து, செய்தித்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் சிலர், முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து முறையிட்டனர். சந்தித்த அனைவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிச்சயமானவர்கள்தான். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செய்தி துறையில் பணியாற்றும் பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் செயல்பாடு குறித்து, ரகசியமாக விசாரித்து அறிக்கை தர உளவுத்துறை போலீசாருக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.
பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் குடும்ப அரசியல் பின்னணி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக பணியாற்றுகிறார்களா? அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களிடம் தொடர்பில் உள்ளார்களா? அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா? அரசுக்கு எதிரான செய்திகளை பரப்புகிறார்களா? அரசுக்கு ஆதரவான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகிறார்களா? அல்லது சுணக்கமாக இருக்கிறார்களா? செய்தி வெளியிடுவதற்காக மற்ற துறை அதிகாரிகளிடம் காசு வாங்குகிறார்களா?
அரசு அதிகாரிகளிடம் டிரான்ஸ்பர், புரமோசன் மற்றும் வேலை வாங்கித்தருவதாக பண வசூலில் ஈடுபடுகிறார்களா? அமைச்சர் மற்றும் மற்ற துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்களுக்கு பணம் தர வேண்டும் எனக்கூறி வசூலில் ஈடுபடுகிறார்களா? இவர்களின் செயல்பாடுகள் குறித்து மற்ற துறைகளின் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள்? உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அரசு தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இதனால், செய்தி மக்கள் தொடர்பு துறையில், பல அதிரடி நடவடிக்கைகள் இருக்கப்போவதாக கூறப்படுகிறது.