/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk-stalin-ni_1.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தின் வீட்டுக்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவருடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞரின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து. தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன். கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
தமிழுணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்துடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும். ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)