ADVERTISEMENT

தமிழகத்தை உலுக்கிய மயிலாப்பூர் கொலை! முழு விவரம்! 

10:49 AM May 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனி பகுதியில் சொகுசு பங்களாவில் ஸ்ரீகாந்த்(65) மற்றும் அவரது மனைவி அனுராதா(60) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். ஸ்ரீகாந்த் குஜராத்தில் பிரபலமான தனியார் ஐடி கம்பெனியை நடத்தி வந்ததுடன் பிரபலமான ஆடிட்டராகவும், பிரபல பைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். இவர்களின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மகாணத்தில் மகளுடன் கணவன் மனைவி இருவரும் தங்கி உள்ளனர். கடந்த ஞாயிறு அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பியவர்களை வீட்டில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த லால் கிருஷ்ணா இன்னோவா காரின் மூலம் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.


அப்பொழுது காரில் இருந்த ரவிராய் என்பவரை தம்பதியினருக்கு தனது நண்பர் என அறிமுகம் செய்து வைத்து லக்கேஜ்களை தூக்குவதற்கு உதவியாக அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பின்னர் பதம்லால் கிருஷ்ணா(45) மற்றும் அவரது நண்பர் டார்ஜலிங்கைச் சேர்ந்த ரவி(39) ஆகிய இருவரும் தம்பதியினரைக் கொடூரமாக அடித்து கொலை செய்து கொள்ளை அடித்து நேபாளம் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.


இந்நிலையில் அவர்களது மகள் இருவருக்கும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது செல்போன்கள் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய உறவினர் திவ்யா என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு இல்லாததால் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன் பேரில் மைலாப்பூர் காவல் ஆயவாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போது ரத்த துளிகள் அங்கு சிதறி இருப்பதை பார்த்துள்ளனர்.


அதனால் ஏதோ விபரீதம் நடந்து இருப்பதை உணர்ந்த போலீசார் ஸ்ரீகாந்தின் மகளிடம் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? என்றும் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிய போதும் அவர் சிறுவயது முதலே தங்களது வீட்டில் வளர்ந்து வருவதாகவும், அவரை மகன் போல் எங்களது தாய் தந்தையினர் வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இருந்தாலும் போலீசார் கிருஷ்ணாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது கார் மூலமாக திருவான்மியூர், அடையாறு, கோயம்பேடு, மதுரவாயல், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு மிக வேகமாக கிருஷ்ணா தப்பி செல்வதை போலீசார் உறுதிபடுத்திக் கொண்டு, ஆந்திரா செல்லக்கூடிய வழியில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் ஆந்திரப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.


தொடர்ச்சியாக குற்றவாளிகளை கண்காணித்து குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் கார் எண் குறித்த விவரங்களை ஆந்திர போலீசாருக்கு கொடுத்ததன் அடிப்படையில் ஆந்திர போலீசார் ஓங்கோல் அருகே குற்றவாளிகள் தப்பிச் சென்ற காரை துரத்தி மடக்கி பிடித்து மைலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆந்திர சென்ற மைலாப்பூர் போலீசார் புகாரளித்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஏராளமான தங்க வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்றது தொடர்பாக ரூ.40 கோடி பணம் இருப்பதாக வாகன ஓட்டுநர் கிருஷ்ணா முன்பாக பேசியுள்ளனர். அந்தப் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக பதம்லால் கிருஷ்ணா திட்டமிட்டு, அவரது நண்பர் ரவியுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு கடந்த மாதம் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவரது தந்தை பதன்லால் சர்மாவையும் குடும்பத்தாரையும் நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் திட்டுமிட்டு இவர்கள் வருவதற்கு முன்னே பண்ணை வீட்டில் குழிதோண்டி வைத்துள்ளார்.


இந்த நிலையில் ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை ஓட்டுநர் பதம்லால் கிருஷ்ணா கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ரவியும், பதம்லால் கிருஷ்ணாவும் இணைந்து முதல் தளத்திற்கு செல்லும் போதே பின்தொடர்ந்து சென்று பின் புறத்தில் இருந்து ஸ்ரீகாந்தை மண்வெட்டியில் உள்ள கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர், அதன் பின் அனுராதாவை கிரிகெட் மட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.


பலத்த காயத்தோடு கீழே சரிந்த இருவரையும் கழுத்து பகுதியில் ஆக்ஷா பிளேடால் அறுத்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த நிலையில் அவர்களிடம் இருந்த கொத்துசாவியை எடுத்து மூன்றடுக்கு லாக்கரில் இரண்டு லாக்கரை மட்டுமே திறக்க முடிந்துள்ளது. அவற்றை திறந்து பார்த்தபோது ரூ. 40 கோடி ரூபாய் பணம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் மூன்றடுக்கு லாக்கரின் இரண்டு அடுக்குகளிலும் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் இருப்பதைக்கண்டு சந்தோஷமடைந்து அவற்றை கொள்ளையடித்துள்ளனர். மூன்றாவது லாக்கர் ரகசிய குறியீடு லாக்கர் என்பதால் அதனை திறக்க முடியாமல் போனது.


அந்த இரண்டு லாக்கரில் இருந்த 1000 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள், 60 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி பிஸ்கட்டுகள், வெள்ளிப் பொருட்கள், 10 வைர கம்மல்கள், பிளாட்டின வளையல்கள் என ரூ.8 கோடிக்கும் அதிகமான நகைகளை கொள்ளையடித்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பின்னர் கொலை செய்யப்பட்ட இடங்களை டெட்டால் ஊற்றி கழுவியுள்ளனர், பின்னர் இருவர் முகத்தையும் ரத்தம் வெளியேறாமல் இருக்க பாலிதீன் கவரால் முழுவதாகவும் சுற்றி அங்கிருந்து காரின் பின் இருக்கையில் தூங்குவது போல போட்டு, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து ஏற்கனவே தோண்டிய குழியில் புதைத்துள்ளனர்.


குறிப்பாக 4*4 அடி நீள, அகலத்தில் 7 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் ஒவ்வொன்றையும் இடுப்பு பகுதியை இரண்டாக உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக உக்கார வைப்பது போல செங்குத்தாக முதலில் ஸ்ரீகாந்த் உடலையும், அடுத்து அனுராதா உடலையும் குழியில் போட்டு அதன் மேல் 5 கற்களைப் தூக்கிபோட்டுள்ளனர்.


பின் போர்வையால் மூடி மண் போட்டு மூடியுள்ளனர். பின்னர் தம்பதியினர் பயன்படுத்திய செறுப்பு, ஆடைகள், டேப், மற்றும் இவர்களின் ரத்தகரை படிந்த ஆடைகளையும் பண்ணை வீட்டின் பின்புறம் பெட்ரோல் ஊற்றி எரித்தவிட்டு, அங்கயே குளித்துவிட்டு அதே இன்னோவோ காரின் மூலம் தப்பி சென்றதும் தெரியவந்தது.


நகைகளோடு நேபாளத்திற்கு தப்பி சென்றால் அங்கு வந்து பிடிப்பது கடினமான காரியம் என்ற காரணத்தால் வேகமாக காரை ஓட்டிசென்றதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இருவரும் அமெரிக்காவிலிருந்து வரும் நாளை அறிந்த கிருஷ்ணா ஒரு வாரத்திற்கு முன்பே இருவரையும் கொலை செய்து புதைப்பதற்காக பண்ணை வீட்டில் குழி தோண்டி அதனை கோணிப்பை போட்டு மண்ணால் மூடி வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


போலீசார் விசாரணையில் பதம்லால் கிருஷ்ணா நகை பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை மகன் போல் பார்த்துக்கொண்ட முதலாளிகளை கொலை செய்துவிட்டதாகவும் தன்னை கொலை செய்துவிடும்படியும் போலீசாரிடம் கதறி அழுதுள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா சடலங்களை புதைத்துவைக்கப்பட்ட நெம்மேலி அடுத்துள்ள சூளேரிக்காட்டில் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக குற்றவாளிகள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.


சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ் மேற்பார்வையில் திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வீடியோ பதிவுகளுடன் இரண்டு சடலங்களையும் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து குற்றவாளிகளை போலீசார் வாகனத்தில் அழைத்து செல்லும் போதே அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவர்களை தாக்கியதால் சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் காணப்பட்டது.


நகை பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர்களை கொடூரமாக கொலை செய்து புதைத்த கார் டிரைவர் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள் நேபாளம் தப்பி செல்ல முயன்ற குற்றவாளிகளை கைது செய்து சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, வைர, பிளாட்டின நகைகளை மீட்ட மைலாப்பூர் காவல்துறையினரை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ் வெகுவாக பாராட்டியதுடன் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT