Skip to main content

முழு ஊரடங்கு: இன்று முதல் 3 நாள்களுக்குச் சேலம் மாநகரில் எவை எவை செயல்படலாம்?

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


சேலம் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் எவை எவை செயல்படும், என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் விரிவாக வெளியிட்டுள்ளது.

 

சேலத்தில் இன்று (ஏப். 26) காலை 6 மணி முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) இரவு 9 மணி வரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் வேகம் திடீரென்று அதிகரித்ததால், தமிழகத்தில் பரவலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையொட்டி வழக்கமாகக் காலை நேரத்தில் மட்டும் இயங்கி வந்த காய்கறி கடைகள், உழவர் சந்தைகள் உள்ளிட்டவை முற்றிலும் மூடப்பட்டன.

 

 

Full Curfew: What can be done in Salem City for the first 3 days today?


இதையடுத்து, வரும் திங்கள் கிழமை (ஏப். 27) முதல் வழக்கமான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும். இந்த த்தளர்வு என்பது, மாநகராட்சி பகுதிகள் நீங்கலாக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.
 

http://onelink.to/nknapp


இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறங்களைக் காட்டிலும் மாநகர பகுதிகளில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகள் என்பதாலும் முழு ஊரடங்கு விதி மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை 6 மணி முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) இரவு 9 மணி வரை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், முழு ஊரடங்கு காலத்தில் சில அத்தியாவசியச் சேவைகளுக்கும் எப்போதும்போல் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் எப்போதும்போல இயங்கும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும்.

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசியச் சேவைகளுக்கு மட்டும் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) எப்போதும் முழுமையாகச் செயல்படும். உணவகங்களில் வீடு தேடிச்சென்று விநியோகம் செய்யும் டோர் ஸ்டெப் டெலிவரி சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

 

Full Curfew: What can be done in Salem City for the first 3 days today?


ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைப்புகளால் நடத்தப்படும் சமுதாயச் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள், பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம். மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். சேலம் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, அதாவது பேக்கரிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் இயங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்பட மற்ற அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் இக்குறிப்பிட்ட நாள்களில் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதில் எந்தத் தடையும் இல்லை. முழு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே மூடி சீல் வைக்கப்பட்ட நோய்த் தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினமும் இருமுறை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும். மாநகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். இத்தடையை மீறி பொதுவெளியில் நடமாடினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் கடும் நோய் என்பதால் இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்