Skip to main content

''பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு'' - பாலை வார்த்த அமைச்சரின் தகவல்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

'' Full cane with Pongal package '' - Information of the Minister

 

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு இன்று (17.11.2021) காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இதற்கான உத்தரவில், 'பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சை அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு உள்ளடங்கிய 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு துணிப்பையுடன் வழங்கப்படும். அதேபோல், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். மொத்தமுள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூபாய் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எப்போதுமே பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் கரும்பு, தற்போதைய அறிவிப்பில் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். 2016ஆம் ஆண்டுமுதல் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டும் விவசாயிகள் இதனை நம்பி கூடுதலாகப் பயிர் செய்துள்ளார்கள். பொங்கல் தொகுப்பிற்காகத் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து 18 ரூபாய்க்கு கரும்பைக் (ஒரு கரும்பின் விலை) கொள்முதல் செய்துவந்தார்கள். இதனால் இந்த வருடமும் தமிழ்நாடு அரசு கரும்புகளை வாங்கும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வேதனையைத் தருவதாகவும் பொங்கல் தொகுப்பில் கரும்பைச் சேர்க்க வேண்டும் எனவும் கடலூரில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்ததிருந்தனர்.

 

tngovt

 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் தொகுப்பில் துணிப்பையுடன் 20 பொருட்கள் வழங்கப்படும். அதேபோல், கூடவே முழு கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார். எப்படியோ கரும்பு விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது அமைச்சர் சொன்ன இந்த தகவல்.

 

 

சார்ந்த செய்திகள்