Advertisment

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் தொடர்பாக சனிக்கிழமை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.

Advertisment

john

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான டி.ஆர். ஜான் வெஸ்லி.

Advertisment

உங்கள் கோரிக்கைகள் என்ன?

01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்.

பழைய பென்சன் திட்டத்தை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?

டெல்லி முதல் அமைச்சர் புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். திரிபுராவில் பழைய பென்சன் திட்டம்தான் உள்ளது. பென்சன் திட்டத்தை பொறுத்தவரை அந்தந்த மாநில அரசு விருப்பப்படியே நடைமுறைப்படுத்தலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

புதிய பென்சன் திட்டத்தின்படி 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 50 வயதுக்கு மேல் பணியில் சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. சிலர் அந்த தொகையை பெறாமல் காலமாகிவிட்டனர்.ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூபாய் 12 ஆயிரம் கோடியும், அரசுப் பணம் ரூபாய் 12 ஆயிரம் கோடியும் என தோராயமாக ரூபாய் 24 ஆயிரம் கோடிக்கு மேலாக என்ன ஆனது என்று தெரியவில்லை. இதனால்தான் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறோம்.

செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜெயக்குமார் கூறுகிறாரே?

jayalalitha

கடந்த 2016 தேர்தல் பரப்புரையில் பேசிய ஜெயலலிதா, ''ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம், பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவோம்'' என்று கூறினார். மேலும் தேர்தலுக்கு முன்னர் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். அந்தக் குழு தனது ஆய்வினை சமர்பித்தது. அதற்குள் ஜெயலலிதா அவர்கள் காலமானார். அதன்பிறகு இந்த விசயத்தை அரசு கிடப்பில் போட்டது. பின்னர் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு ஒரு நபர் குழு என்று இந்த அரசு வைத்தது. அது என்ன ஆனது என்று வலியுறுத்திய பிறகு கடந்த ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் அந்த குழு அறிக்கையை சமர்பித்தது. நீதிமன்றம் அந்த அறிக்கையை பார்த்துவிட்டு, ''சாத்தியமில்லை என்று சொல்வதற்கு ஏன் ஒரு வருடம், இரண்டு வருடம் காலதாமதம் செய்ய வேண்டும்'' என கண்டித்தது.

ஆனால் இந்த அறிக்கையை சமர்பிப்பதற்கு முன்பே சேலத்தில் பேசிய முதல் அமைச்சர், ''புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது'' என்று கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் எப்படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். அதன் பிறகே நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்.

jayakumar

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுதான் வழங்க வேண்டும். கூடுதல் கடன் சுமையை குறைக்க மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். எனவே நிலுவைத் தொகை கோரிக்கையையும் ஏற்க இயலாது என்கிறாரே ஜெயக்குமார்?

கடந்த முறை இந்த கோரிக்கை குறித்து அமைச்சர் முன்பு பேசியபோது, நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளெல்லாம் ஊதிய நிலுவைத் தொகையை வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று கேட்டதற்கு அமைச்சர் எந்த பதிலையும் சொல்லவில்லை.

இன்னொரு முக்கியமான கோரிக்கை என்னவென்றால், அங்கன்வாடி மையத்தில் வகுப்புகளை நடத்த மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கு பதிலாக 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களை, டிஇடி முடித்து வருபவர்களை அங்கன்வாடி மையத்தில் போடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் 2500க்கும் மேலான உபரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் போடுகிறோம் என்கிறார்கள். ஆனால் காலிப்பணியிடங்கள் எத்தனை என்று கேட்கும்போது, அமைச்சர் செங்கோட்டையன் 6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது என்கிறார். அந்த இடத்திற்கு இந்த 2500 பேரை போட வேண்டியதுதானே?

3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த முடிவினை கைவிட வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் நியாயமானதுதான். அரசு மக்களிடத்தில் தவறாக எடுத்து சொல்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் எச்சரித்துள்ளாரே?

நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே 450 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு அழைத்துப் பேசவில்லை. அழைத்துப் பேசாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசு முடிவு எடுக்கிறது. 2003ம் ஆண்டில் இதே அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அரசு 1,90,000 அரசு ஊழியர்களை ஒரே அரசாணையில் டிஸ்மிஸ் செய்தபோதும், அஞ்சாமல் நின்றவர்கள்தான் இந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், பணியாளர்களும். நியாயமான கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு கூறினார்.

teachers protest jacto jeo Promise jayalalitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe