டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதைப் போன்று தமிழகத்திலும் எரிபொருட்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை ஆணி அடித்தாற்போல் ஒரே சீராக வைத்துள்ளது. இதற்கு பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதே சிறந்த உதாரணம். அந்த வகையில் மக்களின் சுமையை இந்த கரோனா காலத்தில் குறைக்கும்பொருட்டு, டெல்லி மாநில அரசு டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 15.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை 9 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் டெல்லி அரசின் இந்த முடிவை வரவேற்பதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.