ADVERTISEMENT

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை!

10:48 AM May 23, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (23/05/2021) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று இரவு 09.00 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் முழு ஊரடங்கு நாளைக்கு அமலுக்கு வர உள்ளதால், தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ ரூபாய் 10- க்கு விற்கப்பட்ட தக்காளி ரூபாய் 50 ஆகவும், உருளைக்கிழங்கு ரூபாய் 30- லிருந்து ரூபாய் 60 ஆகவும், கீரை கட்டுகளின் விலை இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பெருந்தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நாளை (24/05/2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினைப் பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது மக்களை சுரண்டும் ஒரு செயல். இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை ஏற்படும் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும், தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அமைச்சரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT