/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rs_0.jpg)
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். செல்போன் மூலம் நலம் விசாரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறார்கள்.
இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில்,
’’திமுக தலைவரும், எனது ஆருயிர் நண்பருமான கலைஞரின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாகவும், சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கலைஞருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.
தமிழக அரசியலில் முறியடிக்க முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் கலைஞர் ஆவார். திமுகவின் தலைவராக கலைஞர் பதவியேற்றதன் 50-ஆவது ஆண்டு நேற்று தொடங்கிய நிலையில், அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த தகவலும் வந்திருப்பது நம்மை பாதித்திருக்கிறது. கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு அவரை காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் இல்லத்திலும் நேரில் சென்று சந்தித்தேன். கோபாலபுரம் இல்லத்தில் என்னை கலைஞர் மிகச்சரியாக அடையாளம் கண்டு கொண்டார். அதனால் அவர் மிக விரைவில் உடல் நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வருவார் என நானும் மற்றவர்களும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அதற்கு மாறாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.
கலைஞருக்கு அவரது இல்லத்திலேயே தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் முழுமையான உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறேன். அவர் நூற்றாண்டு விழா காண வேண்டும்; மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)