Freedom fighter Tiyagi Cuddalore Anjali Ammal's son Tiyagi Jailveeran has passed away

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் எட்டு முறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர் தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள். இவர், கடந்த 1931 ஜனவரி 10ஆம் தேதி கடலூரில் உப்பு எடுக்கும் போரட்டத்தில் ஈடுப்பட்டதற்காக ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள் நிறை மாதத்தில் பரோலில் வெளியில் வந்து பெற்றடுத்த ஆண் குழந்தைதான் ஜெயில் வீரன். சிறையில் இருந்த வந்தவுடன் பிறந்ததால் இவருக்கு ஜெயில்வீரன் என்று பெயர் சூட்டினார்.

Advertisment

அதன்பின் பதினைந்து நாள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாதத் தண்டனையை அனுபவித்துள்ளார். அதே காலகட்டத்தில் 1933ஆம் ஆண்டில் அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, அஞ்சலை அம்மாளுக்குமூன்று மாதத் தண்டனை விதிக்கப்பட்டபோது, கைக்குழந்தையாக இருந்த ஜெயில்வீரனுடன்தான் வேலூர் சிறைக்குச் சென்றார்.

சிறு பருவத்திலேயே விடுதலை போராட்டத்துக்காக தாயுடன் இரு முறை சிறை சென்றுள்ளார். இந்தநிலையில் கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவில் வசித்து வந்த ஜெயில்வீரன் என்கிற செயவீரன் (91). 7 -ஆம் தேதி இரவு சிதம்பரம் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் மற்றும்பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisment