/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4551.jpg)
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி - பெரியாத்தா தம்பதியினருக்கு 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பல பயிற்சிகளைக்கற்று சிறந்தவீரராகத்திகழ்ந்தவர் ஆவார்.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார். தீரன் சின்னமலை அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி கடந்த 1805 ஆம் ஆண்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கும், சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அவரின் நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்திலும், அவரின் நினைவினைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார்உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)