Advertisment

இலவச வேட்டி, சேலை தயாரிப்பு... கவனம் செலுத்துமா கைத்தறித்துறை?

free vesti and sarees tn govt erode power looms

Advertisment

இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான ஆணையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதோடு அரசின் கவனத்தை ஈர்க்க ஈரோட்டில் நேற்று (10/08/2022) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த அந்த கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கூறும்போது, "இலவச வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 225 விசைத்தறி கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 67 ஆயிரம் தறிகளும், சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை தயாரிக்கப்படும். அதில் 30 லட்சம் வேட்டி, 30 லட்சம் சேலைகள், கைத்தறி மற்றும் பெடல் தறி உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 493 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மொத்த உற்பத்தியில் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 120 விசைத்தறி சங்கங்களும் பயன்பெறும். இவ்விரு பகுதிகளில் மட்டும் சுமார் 70 சதவீதம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisment

கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தாமதமாக, செப்டம்பர் மாதம் தான் ஆணை வழங்கப்பட்டது. இதனால் பொங்கல் முடிந்த பிறகும், பிப்ரவரி மாதம் வரை வேட்டி, சேலை உற்பத்தி தொடர்ந்தது. தைப்பொங்கலுக்கு முன்பே ரேஷன் கடைகள் மூலம் வேட்டி, சேலைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே தற்போது அதற்கான ஆர்டரை வழங்கினால்தான் உற்பத்தியை டிசம்பருக்குள் பூர்த்தி செய்ய முடியும்.

சென்ற 7 ஆண்டுகளாக விசைத்தறி சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி ரூபாய் 150 கோடி அரசு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பல கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தை சந்திக்கின்றன.கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் வேட்டி உற்பத்திக்கு ரூபாய் 24 கூலியாகவும், சேலைக்கு ரூபாய் 43 கூலியாகவும் தரப்படுகிறது. அரசு நிர்ணயித்தக் கூலியை உயர்த்தி தர நாங்கள் கோரவில்லை. சென்ற 7 ஆண்டுகளாக வழங்க வேண்டிய ரூபாய் 150 கோடி கூலி பாக்கியை சங்கங்களுக்கு வழங்குமாறு தான் கேட்கிறோம்.

மத்திய அரசு பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது. இதன் மூலம் விசைத்தறிகளுக்கு பல்வேறு மானியங்கள் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது அதையும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் விசைத்தறிகள் நவீனப்படுத்தவும், நவீன தறிகளை வாங்கவும், உதவும். இதன் மூலம் பல விசைத்தறியாளர்கள் மாநில அரசின் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீருடைதுணியையும் உற்பத்தி செய்ய இயலும். தற்போது சில விசைத்தறியாளர்கள் மட்டுமே நவீன தறி கொண்டு சீருடை துணிகளை உற்பத்தி செய்கின்றனர். எங்கள் கோரிக்கையை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe