மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அதன்படி 20 லட்சம் மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்யச் சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை அரசின் எல்காட் நிறுவனம் கடந்த மாதம் 23ஆம் தேதி கோரியது. அந்த வகையில் இன்று (25.06.2025) வரை ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் மடிக்கணினியானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அரசின் சார்பில் மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கான திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. இதில் டெல், ஏசர், லெனோவா, ஹச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளன. முன்னதாக இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக நடந்த பல்வேறு கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு எல்காட் நிறுவனம் சார்பில் உரியப்பதில் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியைப் பொறுத்தவரை மடிக்கணினிகளை எவ்வளவு விரைவாகத் தயாரிப்பது?, தரமாகத் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/25/untitled-3-2025-06-25-20-36-27.jpg)