Skip to main content

பல உயிர்களைப் பலி கொடுத்து போராடிப் பெற்றது இலவச மின்சாரம்... கை வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: ஈஸ்வரன் கண்டனம்

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
E.R.Eswaran



விவசாயிகளின் இலவச மின்சாரத்தில் கை வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மாநில உரிமைகளை நீர்த்துப்போக செய்யும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக வரைவு மசோதாவை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பது மாநில உரிமைகளைப் பறிப்பதற்கான முதல்படி. உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட மசோதா இது. அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டிய ஒன்று. 
 

 

விவசாயத்திற்கான தண்ணீரைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சில இடங்களில் வாய்க்கால்களை வெட்டி வயல்களுக்கு தண்ணீரை அரசாங்கம் கொடுக்கிறது. மற்ற இடங்களில் விவசாயிகள் கிணறு தோண்டி சொந்த செலவில் மோட்டார் பம்ப் வைக்கிறார்கள். தேவையான மின்சாரத்தை அரசாங்கம் கொடுக்கிறது. அப்போதுதான் அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்திக்கான செலவு சமமாக இருக்கும். 
 

வாய்க்கால் விவசாயம் மற்றும் கிணற்று விவசாயம் மூலம் உற்பத்தியாகிற விளைபொருட்களுக்கும் ஒரே விற்பனை விலை தான். வாய்க்கால் அமைத்துக்கொடுக்க முடியாத நிலங்களுக்கு அரசாங்கம் இலவசமாக மின்சாரம் கொடுக்கிறது. இலவச மின்சாரம் இல்லையென்றால் விவசாயம் செய்ய முடியாது. 
 

பல உயிர்களைப் பலி கொடுத்து அரசாங்கத்தைப் புரிய வைத்து போராடிப் பெற்றது இலவச மின்சாரம். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் பல தற்கொலைகளை தமிழகம் சந்திக்கும். மாநில அரசு ஏமாந்து விடக்கூடாது. இலவச மின்சாரத்தை காப்பாற்றிக்கொள்ள விவசாயிகளோடு இணைந்து எத்தகைய போராட்டத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாய இணைப்புகளுக்கு மின்மீட்டர் பொறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கரோனாவோடு நாடே போராடிக் கொண்டிருக்கும் போது மனிதாபிமானமில்லாமல் மின்சார வரைவு மசோதாவை அனுப்பியிருப்பதை வேதனையோடு கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

வெடித்துச் சிதறிய மின் வயர்கள்! - பயங்கர விபத்து தடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Exploded electrical wires! Terrible accident prevention!

 

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், இரண்டாவது வார்டு பிரதான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பத்தில் உள்ள வயர்கள் பட்டாசு போல் வெடித்துச் சிதறியது. குடியிருப்பின் வாசல் அருகே இருந்த மின்கம்பத்தில் தீவிபத்து ஏற்பட்டு வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தச் சத்தம் கேட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். 

 

சுமார் அரை மணி நேரமாகத் தொடர்ந்து பட்டாசு தீப்பொறி பறப்பது போல் தீயானது மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து அருகே உள்ளவர்கள் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த தீ விபத்து கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் தொடர்ந்து எரிந்து வந்தன. இதனை அங்கிருந்த பொதுமக்கள் மணலைக் கொண்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். 

 

இந்த தீவிபத்து காரணமாக பூவிருந்தவல்லி இரண்டாவது வார்டு முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு மத்தியில் நடைபெற்ற இந்த மின் விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.