Fraud in government employment mani bail petition  dismisses

Advertisment

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிரிவு உதவியாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிரிவு உதவியாளராக இருந்தவர் மணி என்கிற நடுப்பட்டி மணி. இவர், அப்போதைய முதல்வருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர் தமிழ்செல்வன் என்பவர், சேலம் மத்தியக் குற்றப்பிரிவில் அளித்த புகாரில், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு நடுப்பட்டி மணி ஏமாற்றிவிட்டதாகவும், அவருடைய கூட்டாளி செல்வகுமார் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடுப்பட்டி மணி, செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இதையறிந்த அவர்கள் இருவரும் திடீரென்று தலைமறைவாகினர்.

Advertisment

இதற்கிடையே நடுப்பட்டி மணி, முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி குமரகுரு முன்னிலையில் திங்களன்று (நவ. 1) விசாரணைக்கு வந்தது. மணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''அவர் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அவருடைய பெயரைப் பயன்படுத்தி செல்வகுமார்தான் பணம் வசூலித்துள்ளார். இந்த சம்பவத்தில் மணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார்.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை, ''தமிழகம் முழுவதும் அரசு வேலை வாங்கித் தருவதாக மணி மீது அடுக்கடுக்காகப் புகார்கள் குவிந்துவருகின்றன. இதில், மணிக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் தலையீடு இல்லாமல் செல்வகுமாரால் பணம் வாங்கியிருக்க முடியாது. அவர் மீதான புகார் விசாரணையில் இருக்கிறது. தற்போது மணிக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, மணி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.