/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1696.jpg)
சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி கார் ஓட்டுநரிடம் 2 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அதிமுக பெண் கவுன்சிலர் வேட்பாளர் மீது கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்த தினேஷ் (25),கார் ஓட்டுநர். இவர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் பிப். 2ம் தேதி ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-சேலம் மாநகராட்சி 20வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் ரவீந்திரன். கடந்த அதிமுக ஆட்சியின்போது இவர், கால்நடைத்துறை அல்லது கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, என்னிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கினார்.
ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி அரசு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவீந்திரன் இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய மனைவியிடம் சென்று, என்னுடைய பணத்தைக் கொடுக்கும்படி கேட்டேன். அவரும் பணத்தைக் கொடுக்காமல் என்னை விரட்டி அடித்து விட்டார். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியின்போதே பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் புகார் மனுவைவிசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து தினேஷ் மேலும் கூறுகையில், ''என்னிடம் ரவீந்திரன் பணம் வாங்கும்போது அவருடைய மனைவி சுதாவும் உடன் இருந்தார். அதன் அடிப்படையில்தான் அவரிடமும் பணத்தைக் கேட்டேன். ஆனால் தர மறுக்கிறார். என்னைப் போலவே பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரவீந்திரன் பணம் பெற்றிருந்தார்.
ரவீந்திரன் மறைவுக்குப் பிறகு, 20வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக அவருடைய மனைவி சுதாவுக்கு சீட் வழங்கியுள்ளனர். அவரிடம் இருந்து என்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும்'' என்றார்.இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)