Skip to main content

தங்கம் வழங்குவதாகக் கூறி செல்போனில் பேசி மோசடி..!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Fraud by talking on a cell phone claiming to deliver gold


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பலரது செல்ஃபோனுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய பெண்கள் அன்போடும் நயமாகவும், நீங்கள் எங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆக உள்ளீர்கள். அதன் காரணமாக வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக குலுக்கல் நடத்தப்பட்டது. 

அப்போது உங்களது செல்ஃபோன் எண்ணுக்கு இரண்டு கிராம் தங்கம் பரிசாக விழுந்துள்ளது என்று கூறியுள்ளார்கள். இதை முதலில் பலரும் நம்பவில்லை. அதோடு இதற்கான விளக்கமும் பலர் கேட்டுள்ளனர். அப்போது எதிர்முனையில் செல்ஃபோனில் பேசிய இளம் பெண்கள், நீங்கள் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளீர்கள். இதுபோல் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களாக இருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில், நாங்கள் பரிசுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்மூலம் குலுக்கல் முறையில் தங்கக் காசு பரிசாக விழுந்த அதிர்ஷ்டசாலிகளை தொடர்புகொண்டு பேசி வருகிறோம் என்று ஆசையைத் தூண்டும் விதத்தில் அந்தப் பெண்கள் நளினமாகப் பேசியதும் செல்ஃபோன் வாடிக்கையாளர்கள் நம்பிவிட்டனர். 
 

அப்படியானால் அந்த இரண்டு கிராம் தங்கத்தை நாங்கள் பெறுவதற்கு வழிமுறை என்ன என்று கேட்டனர். இந்தப் பரிசுக்கான தங்கத்தை நாங்கள் அஞ்சல் துறை மூலம் உங்கள் முகவரிக்கு பார்சல் அனுப்பி வைப்போம். நீங்கள் பார்சல் செலவிற்கான தொகை ரூ.600 மட்டும் செலுத்திவிட்டு உங்கள் தங்கப் பரிசு பார்சலை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி சம்பந்தப்பட்டவர்களின் முகவரிகளையும் வாங்கிக்கொண்டனர். அதன்பிறகு, அவர்கள் கூறியது போல மரக்காணம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அஞ்சல் துறை மூலம் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை 600 ரூபாய் செலுத்தி ஆசையாசையாய் வாங்கி பிரித்துப் பார்த்துள்ளனர். அதன் உள்ளே தங்க நிறத்தில் நான்கு வளையல்கள் மட்டும் இருந்துள்ளன. 

 

இதைப்பார்த்து அதிர்ச்சியும் சந்தேகமும் அடைந்த அவர்கள், அருகில் உள்ள நகைக் கடைகளுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போதுதான் தெரியவந்தது இது தங்கம் இல்லை, கவரிங் கடைகளில் விற்கும் தரமற்ற கவரிங் வளையல்கள் என்று. இதுபோல மோசடியால் ஏகப்பட்ட பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி, பலர் வெளியே இதுகுறித்து கூறவும் இல்லை. ஏமாந்தது போதும் இனிமேல் ஏமாறக்கூடாது ஏமாற்றப்பட்ட தொகை 600 ரூபாய் தானே என்று தங்களை சமாதானப் படுத்திக் கொண்டனர்.

 

இதையும் மீறி மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சையது அமீர் என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் மேற்படி மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்ஃபோன் மூலம் பேசி, தங்கக் காசு தருவதாக மோசடி செய்த கும்பலைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்