
சேலத்தில், கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது இருவர் தனித்தனி புகார் அளித்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்தவர் குமார் (34). தள்ளுவண்டியில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; அதிமுகவைச் சேர்ந்த அரியானூர் பழனிசாமி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பள்ளப்பட்டியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் என்னிடம், கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதையடுத்து, சேலம் புது ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த மாரியப்பன் மூலமாக அரியானூர் பழனிசாமியிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதற்கிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு, கொரோனாவால் மாரியப்பன் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மகன் கண்ணனை அழைத்துக்கொண்டு அரியானூர் பழனிசாமியை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அதன்பிறகும் பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.
மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் சென்று கேட்டபோது, இனிமேல் பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார். அவரிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
மற்றொரு புகார்:
சேலம் மாமாங்கம் தில்லை நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (35). இவரும், மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சேலம் புது ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த மாரியப்பன் என்பவர், கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்.
இதையடுத்து அவர் என்னை அதிமுக பிரமுகர் அரியானூர் பழனிசாமியிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் நேரடியாக ஒரு லட்சமும், மாரியப்பன் மூலமாக 2 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். ஆனால் அரியானூர் பழனிசாமி எனக்கு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் கடன் வாங்கிக் கொடுத்த பணத்திற்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.
இவ்விரு புகார்கள் குறித்தும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் சிக்கியுள்ள அரியானூர் பழனிசாமி, அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.
கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, அரியானூர் பழனிசாமி மீது கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பும் சிலர் புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.