
சேலம் அருகே, வீடு கட்டித் தருவதாக ஜவுளி வியாபாரியிடம் 1.61 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பாஜக முன்னாள் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர் ராஜ் (52). ஜவுளி வியாபாரியான இவர், மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (33). பாஜக முன்னாள் பிரமுகரான இவர், கட்டட ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். இவர் மீது சில மோசடி புகார்கள் வந்ததை அடுத்து பாஜக தலைமை சுரேந்திரனை ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கிவிட்டது.
இந்நிலையில், ஜவுளி வியாபாரி கதிர் ராஜ் கடந்த 2019ம் ஆண்டு தனக்குப் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கும்படி சுரேந்திரனிடம் கேட்டுள்ளார். இதற்காக சதுர அடிக்கு 2,200 ரூபாய் வீதம் ஒப்பந்தம் பேசி, கட்டுமான செலவுக்காக 1.61 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சுரேந்திரனோ கதிர் ராஜுக்கு வீடு கட்டிக் கொடுக்காமல் அந்தப் பணத்தில், நிலவாரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த கதிர் ராஜ் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு சுரேந்திரனிடம் பலமுறை கேட்டுப் பார்த்தும் அவர் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதையடுத்து, மல்லூர் காவல் நிலையத்தில் சுரேந்திரன் மற்றும் அவருடைய மனைவி தீபா ஆகியோர் மீது புகார் அளித்தார் கதிர் ராஜ். காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மோசடி தொகையின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றதால், இந்த வழக்கு உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து மாவட்டக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளமுருகன் மீண்டும் அந்தப் புகார் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே அவர்கள் இருவரும் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.
குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன. 23) சுரேந்திரனை கைது செய்தனர். அவரை, சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுரேந்திரனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.