/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1796.jpg)
சிவகாசி அருகே, விஸ்வநத்தத்தில் 4 வயது சிறுவனைக் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகாசி, விஸ்வநத்தம் பகுதி, திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பார்த்திபன், பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு 8 வயதில் பிரியதர்ஷன், 4 வயதில் தீனதயாளன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் பக்கத்து வீட்டு மணலில் விளையாடிக்கொண்டிருந்த தீனதயாளனை, நேற்று (13.09.2021) மாலையிலிருந்து காணவில்லை. உறவினர்கள் பலஇடங்களில் தேடியும் தீனதயாளன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்தனர். அதில், பக்கத்து வீ்ட்டில் குடியிருக்கும் அல்போன்சாவின் 13 வயது பேரனும், செல்வம் என்பவரின் 11 வயது மகனும் தீனதயாளனை அழைத்துச் செல்வது, கேமராவில் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த இரண்டு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீனதயாளன் தனது பாட்டி அல்போன்சா (53) வீட்டு முன்பு குவித்துவைக்கப்பட்டிருந்த மணலில் விளையாடியதாகவும், அப்போது சிறுவனை அல்போன்சா கண்டித்ததாகவும்,இதனால் அல்போன்சாவிற்கும் தீனதாயளன் பாட்டிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து தீனதயாளனை, தனது நண்பருடன் அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் அல்போன்சாவின் 13 வயது பேரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தீனதயாளன் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது. மேலும், அந்த இரண்டு சிறுவர்களையும் சிவகாசி டவுன் போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)