/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_68.jpg)
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நான்குவார காலஅவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோது, பல பல்கலைக்கழகங்கள், தேர்வு முடிவுகளை வெளியிட்டதாகவும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும், ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்தி, அது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘கரோனா சூழல் தணிந்து தற்போது கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரியர் தேர்வுகள் நடத்தியது குறித்து பல்கலைக்கழகங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், நான்கு வார கால அவகாசம் வழங்கி, வழக்கைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)