/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ariyalur-12th-stnt.jpg)
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம். இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் பூஜா என்பவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 22 )என்ற வாலிபர் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதற்கு பூஜாவை தூது செல்லுமாறு பூஜாவின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதை பார்த்த பூஜா வேல்முருகன் கோரிக்கையை நிராகரித்ததோடு இது தொடர்பாக தனது தந்தையிடம் வேல்முருகன் எஸ்எம்எஸ் அனுப்பியது குறித்து கூறியுள்ளார். பூஜாவின் தந்தை இதை தட்டிக்கேட்ட காரணத்தினால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனின் உறவினர்கள் வேலாயுதம் வீட்டிற்கே சென்று அவரையும் அவரது மகள் பூஜாவையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தந்தைக்கும் மகளுக்கும் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் பூஜா காவல் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி, மத்திய மண்டல ஐஜி ஆகியோருக்கு தனக்கும் தனது தந்தைக்கும் ஏற்பட்ட நிலை குறித்து புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த தகவல் அறிந்த வேல்முருகன் தனது நண்பர்கள் சிலருக்கு பூஜாவின் செல்போன் எண்ணை கொடுத்து அவர்கள் மூலம் மேலும் மேலும் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூஜா நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை பூஜாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காததால் பூஜா உயிரிழக்க காரணம் எனவே வேல்முருகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூஜாவின் உடலை வாங்க மறுத்து அரியலூர் அரசு மருத்துவமனை அருகில் பூஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பூஜாவின் உடலை பெற்றுச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகனின் நண்பர்கள் மூவரை கைது செய்துள்ளனர். வேல்முருகன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)