Skip to main content

கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி! 

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Four person passed away in same family

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள பெருமுக்கல் பகுதியில் கல்குவாரிகள் நிறைய உள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான டன் கற்கள் பல்வேறு பணிகளுக்கு இங்கிருந்து வெட்டி எடுத்து செல்லப்படுகின்றன. பாறைகளில் வெடிவைத்து தகர்க்கப்பட்டு கற்கள் தோண்டி எடுத்துச் செல்வதால் இப்பகுதியில் பெரும்பெரும் பள்ளங்களும், அதில் அதிகளவு தண்ணியும் தேங்கியிருக்கும். பெருமுக்கல் சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தக்கல் குட்டை தண்ணீரில் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட காரியங்களை செய்துவருகின்றனர். 

 

பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூங்காவனம், புஷ்பா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்துவருகின்றனர். புஷ்பாவின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ. இவரது இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் மூவரும் பள்ளி விடுமுறை என்பதால் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள அவர்களது பாட்டி புஷ்பா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். 


இந்நிலையில், நேற்று மதியம் புஷ்பா, தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் கல்குவாரியில் குளிப்பதற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் குளித்துள்ளனர். அப்போது, குழந்தைகள் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் தத்தளித்துள்ளனர். குழந்தைகள் சிக்கியதைக் கண்டு புஷ்பா, தண்ணீரில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இந்நிலையில் அவர்களின் கூச்சல் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் நால்வரும் நீரினுள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி அவர்களை நீண்ட நேரமாக தேடி நால்வரின் சடலத்தையும் மீட்டனர். இது குறித்த தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்