Skip to main content

மனைவி, மகன், பெற்றோரை கொன்றுவிட்டு கணினி பொறியாளர் தற்கொலை; துயர முடிவுக்கு காரணம் என்ன?

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Four people passes away in one family police investigation in salem

 

சேலத்தில், மனைவி, மகன், தாய், தந்தை ஆகியோரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணினி மென்பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் திலக் (38). கணினி மென்பொறியாளரான இவர், வீட்டில் இருந்தபடியே ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு ஐந்தரை வயதில் சாய் கிரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த தம்பதிக்கு ஆறு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

 

திலக்கின் பெற்றோரும் மகனுடனேயே வசிக்கின்றனர். அவருடைய தாயார் வசந்தா (75), தந்தை சிவராமன் (85) ஆகிய இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும், திலக் தனது குடும்பத்துடன் வீட்டின் முதல் தளத்திலும் வசித்து வந்தார். சிவராமன், பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

 

இந்நிலையில், புதன்கிழமை (ஆக. 23, 2023) காலை 6 மணியளவில் அக்கம்பக்கத்தினர் பதற்றத்துடன் திலக்கின் வீட்டுக்குச் சென்று, கீழ் தளத்தில் உள்ள அறைக் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

 

சேலம் மாநகர வடக்கு சரக காவல்துறை துணை ஆணையர் கவுதம் கோயல், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் காவலர்கள் திலக் வீட்டிற்கு விரைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே வசந்தா குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதே அறையில் முதியவர் சிவராமன் சடலமாகக் கிடந்தார். 

 

Four people passes away in one family police investigation in salem

 

ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த காவல்துறையினர் மேல் தளத்தில் உள்ள திலக்கின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் திலக் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். படுக்கையில் அவருடைய மனைவி, 6 வயது குழந்தை ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வசந்தாவை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திலக், மகேஸ்வரி, சிறுவன் சாய் கிரிஷாந்த், அவருடைய தந்தை சிவராமன் ஆகிய நான்கு சடலங்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

திலக்கின் அறையில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், ''கடன் தொல்லையால் வாழப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்கிறோம்'' என்று திலக் தற்கொலை குறிப்பு எழுதி வைத்திருந்தார். மேலும் திலக், அதிகாலை 5 மணியளவில், பெங்களூருவில் வசிக்கும் அவருடைய அண்ணன் சந்துருவின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, ''மகனுக்கு எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. கடன் நெருக்கடியால் தவிக்கிறோம். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம்,'' என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது தெரியவந்தது. 

 

காலையில் இந்த தகவலை பார்த்த சந்துருதான், திலக்கின் பக்கத்து வீட்டினருக்கு தகவல் அளித்து, தன் தம்பி குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். சந்துருவுக்கு அதிகாலை 5 மணியளவில்தான் வாட்ஸ்ஆப் குறுந்தகவல் அனுப்பி இருப்பதால், அதன்பிறகுதான் திலக் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக மனைவி, மகன், பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொன்றிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர். 

 

சிறுவன் சாய் கிரிஷாந்த், ஆட்டிசம் எனப்படும் புறவயச் சிந்தனையற்ற குழந்தை எனக் கூறப்படுகிறது. இதற்காக திலக் பல இடங்களில் சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவச் செலவுக்காக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை என்கிறார்கள். இதனால் திலக்கும், அவருடைய மனைவியும் கடும் மன அழுத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளனர். 

 

விசாரணையில் மேலும் சில தகவல்களும் கிடைத்துள்ளன. ஏற்கனவே துபாயில் பிரபலமான கணினி மென்பொருள் நிறுவனத்தில் மாதம் 5 லட்சம் ரூபாய் ஊதியத்தில் திலக் வேலை செய்து வந்துள்ளார். மகனின் சிகிச்சைக்காகவே அவர் அங்கிருந்து வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். 

 

கைநிறைய சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாகவும், தனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் கடன் வாங்கி முதலீடு செய்து இருந்ததாகவும், அதில் பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

 

ஒருபுறம் மகனின் சிகிச்சை செலவும், மறுபுறம் கடன் நெருக்கடியும் இருந்ததாலேயே திலக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

 

நான்கு சடலங்களும் புதன்கிழமை மாலை 5 மணியளவில் உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டது. அவர்கள் என்ன மாதிரியான விஷத்தை உட்கொண்டனர் என்பது குறித்து அறிய, முக்கிய உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே, சென்னையில் வசிக்கும் திலக்கின் மனைவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் மாலையில் சேலம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விசாரித்த பிறகே, திலக் குடும்பத்தின் துயர முடிவுக்கான காரணம் தெரிய வரும் என்கிறது காவல்துறை. இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திலக், அவருடைய மனைவி ஆகியோரின் அலைப்பேசிகளை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தனர்? யாரிடம் இருந்தாவது மிரட்டல் வந்ததா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடன் நெருக்கடி அல்லது மருத்துவக் காரணங்களால் ஒரு குடும்பமே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்