Skip to main content

மோசமான சாலை! நேர்த்திக்கடனின் போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் நால்வர் பலி!

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

four passed away in Nemili temple accident

 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ளது கீழவீதி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்த 6வது நாள் அல்லது 8வது நாள் நடக்கும் மயிலார் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து இவ்விழாவினை பக்தி பரவசத்துடன் காண்பார்கள்.

 

இந்தாண்டு நடைபெற்ற மயிலார் திருவிழா ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இரவு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்யும் பொருட்டு முதுகில் அலகு குத்திக்கொண்டு கிரேன் ரோப் வழியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து சுவாமி சிலைக்கு பூ மாலை அணிவிப்பார்கள் பக்தர்கள். அதன்படி அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்திக்கொண்டு கீழவீதியைச் சேர்ந்த 40 வயது பூபாலன், 39 வயது முத்துக்குமார், 17 வயதேயான ஜோதிபாபு, 42 வயதான சின்னசாமி ஆகியோர் வந்தனர். கிரேன் மெதுவாக ஊர்ந்தபடி வந்துகொண்டு இருந்தது.

 

கிராம சாலையில் இருந்து மேடு பள்ளத்தில் கிரேன் ஏறி இறங்கும்போது பக்தர்கள் தொங்கி வந்த ரோப் வேகமாக ஆடியதில் முதுகில் குத்தியிருந்த அலகு பிய்த்துக்கொண்டு மேலிருந்து கவிழ்ந்தபடி அலறல் சத்தத்தோடு பக்தர்கள் கீழே விழுந்தனர். இதில் பூபாலன், முத்துக்குமார், ஜோதிபாபு மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவ சிகிச்சையில் இருந்த சின்னசாமியும் இறந்தார். இதனால், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இன்னும் 6 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

 

இந்த சம்பவத்துக்கு காரணமென கிரேன் ஆப்ரேட்டரை நெமிலி காவல்நிலைய போலீஸார் கைது செய்து, கிரேனையும் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, “காவல்துறை அனுமதி பெற்று திருவிழா நடைபெற்றது. சாலை சரியில்லாததால் இந்த விபத்து நடந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் தடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்