Skip to main content

ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது! 

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

Four arrested in Goondas  in one day

 

திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் கைதான நான்கு குற்றவாளிகள் தொடர் குற்றச் சம்பங்களில் ஈடுபட்டு வந்ததாலும், மேலும் அவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய எண்ணம் உடையவர்கள் என்பதாலும் அவர்கள் நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

திருச்சி மாநகரில் கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரு மருந்தகத்தில், அரவிந்த்(25) மற்றும் ஜெர்பின்(23) ஆகிய இருவரும் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளைச் சட்டவிரோதமாக விற்பதாக அரியமங்கலம் காவல்நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அரியமங்கலம் காவல்துறையினர் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சட்டத்தை மீறி போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் கடையில் இருந்து 1,110 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை ஊசிகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொடர்ந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்று வந்ததால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து ஆணையர் உத்தரவிட்டார். 

 

அதேபோல், திருச்சி மாவட்டம், கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் அறிவாலயம் அருகில் கடந்த மாதம் 2ஆம் தேதி  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து அவரிடமிருந்து 2000 ரூபாய் பணமும், அவரின் இருசக்கர வாகனத்தையும் ஒரு மர்மநபர் கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துள்ளார். இது தொடர்பாக வாகன உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகாமணி(29) என்பவர் இந்தக் குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு காவல்துறையினர் அனுப்பினர். 

 

அதேபோல், கடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாவட்டம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புதூரில் உள்ள நாகநாதர் டீ ஸ்டால் அருகே நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றது தொடர்பான புகாரின்பேரில் பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன்(23), என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகளும், மகாமணி மீது 14 வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்