Formula - 4 car racing; Argument in the High Court

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (29.08.2024) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் விரிவான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டிருந்தது. எனவே இந்த தேவையில்லாத தேவையில்லாதது” எனத் தெரிவித்தார்.

Advertisment

Formula - 4 car racing; Argument in the High Court

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “பார்முலா 4 கார் பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் அமைப்பு தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருங்காட்டுக்கோட்டையில் சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் பந்தயம் நடத்த எந்த எதிர்ப்பும் இல்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை கார் ரேஸுக்காக மூட முடியாது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பந்தயத்தை நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்” என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கடந்த முறை கார் பந்தயத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது, ஒலி கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பந்தயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் எந்த நிபந்தனையும் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, “பொதுமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது.

Advertisment

Formula - 4 car racing; Argument in the High Court

பந்தயம் நடத்தப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்படும். பந்தயத்துக்கு அரசு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதே காரணத்துக்காக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் இருக்கக் கூடாது. கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகச் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பிடம் சான்று பெற்றுவிட்டீர்களா?. இது தொடர்பாக மதியம் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இதனையடுத்து மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த வரைபடத்தைச் சமர்ப்பித்து நீதிபதிகளிடம் விளக்கினார். மேலும் அவர், “எப்.ஐ.ஏ. சான்றிதழ் கார் பந்தயம் தொடங்க உள்ள நேரத்திற்கு முன்பு உள்ள மூன்று மணி நேரத்திற்குள் தான் கிடைக்கும். அப்போது தான் சாலையின் தரத்தை ஆய்வு செய்து தருவார்கள்” எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், “சனிக்கிழமை 12 மணிக்குள் எப்.ஐ.ஏ. சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரர் தரப்பிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விடுங்கள். எனவே சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” எனத் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான விரிவான தீர்ப்பை இன்று மாலை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது.