Skip to main content

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி முன்னாள் துணைவேந்தர் வழக்கு!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

Former Vice Chancellor of anna university filed nomination against harrier students result

 

 

கலை அறிவியல்,  பொறியியல்,  எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை, தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவரது மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை,  அரசின் அறிவிப்பானது சோர்வடையச் செய்ததோடு, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையிலும் உள்ளது.

 

25 % மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும், ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். தேர்வில் பங்கேற்றால்தான், மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைக்கும். சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை தேர்வு மூலம்தான் பிரதிபலிக்கும். 

 

சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு,  அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்தது தவறு. அரசிடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை கைவிடக்கோரி மனு அளித்தும் பலனில்லை அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.  வழக்கு முடியும் வரை அதற்கு  தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இதே கோரிக்கையுடன்,  வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு,  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று மதியம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.  ராம்குமார் வழக்கு விசாரணைக்கு வரும்போது, தனது மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டுமென பாலகுருசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.