Former students built a house for the ailing headmaster

நலிவடைந்து குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த தலைமை ஆசிரியருக்கு புவனகிரி பகுதியில் அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் வீடு கட்டி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி நகரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 வருடம் தலைமை ஆசிரியராக சந்திரா(75) என்பவர் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் திருமணம் ஆன 5 ஆண்டுகளில் இவரது கணவர் இறந்ததால் தனிமையில் ஓய்வு பெற்ற பிறகு புவனகிரியில் உள்ள காரியக்கார தெருவில் குடிசை வீட்டில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறுமையில் வசித்து வந்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியையிடம் கல்வி பயின்ற பிரேம் ஆனந்த், மணிகண்டன் ஆகிய இரு முன்னாள் மாணவர்களும் அறிந்து அவருக்கு நல்ல வீடு கட்டித் தர வேண்டும் என்று அப்போது இவர்களுடன் படித்த மாணவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி உதவிகளை பெற்றுள்ளனர். அதனையடுத்து தற்போது அவர் வாழ்ந்த இடத்திலேயே ரூ 3.5 லட்சம் மதிப்பில் புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய வீட்டின் சாவியை அவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை(13.6.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் உறவினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆசிரியரின் வறுமை நிலையை கண்டு வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் அறிந்து அனைத்து தரப்பு மக்களும் முன்னாள் மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.

ஆசிரியை சந்திரா நலிந்த ஆசிரியர்களை கை விடாமல் மாணவர்கள் உதவியது நெகிழ்ச்சி அளித்துள்ளது. இதேபோல் அனைத்து மாணவர்களும் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.