Skip to main content

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Former Special DGP Rajesh Das arrested

தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டில் கடந்த 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Former Special DGP Rajesh Das arrested

இந்நிலையில் வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் இன்று (24.05.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவல் கண்காணிப்பாளருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து ராஜேஷ் தாஸ் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்