/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-hight-court-order_2.jpg)
தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி, கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.ஐ தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழ்நாடு அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறுமணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், ஜூலை மாதம் 29ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த வழக்கு சம்பந்தமான 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே டிஜிபி தரப்பில், இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும், எஸ்.பி. கண்ணன் தரப்பில் இந்த வழக்கிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் இரண்டுபேரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களைத் தனித்தனியாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (29.10.2021) இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி. கண்ணன் நேரில் ஆஜரானார். ஆனால் டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, டிஜிபி வராதது குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும், மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். எனவே இதற்கு 15 நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டனர். இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கோபிநாதன், சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்தார். மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)