முன்னாள் சிறை வார்டன் ஓட ஓட வெட்டிக்கொலை; பிரபல ரவுடி உட்பட 9 பேர் கைது!

சேலம் சோளம்பள்ளம் அய்யம்பெருமாம்பட்டி புது சாலையைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் மாதேஷ் (28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். பணிக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சூரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான சொகுசு கார் உள்பட இரண்டு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

Former prison warden incident;police investigation

இந்த சம்பவத்தில் சிறை வார்டன் மாதேசுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த வந்த மாதேஷ் மீண்டும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் மீண்டும் அவரை கைது செய்த காவல்துறையினர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு மாதேஷ் சிறையில் இருந்து மீண்டும் பிணையில் வெளியே வந்தார். பிரபு என்பவருடன் சேர்ந்து ஆண்டிப்பட்டியில் மீன் பண்ணை நடத்தி வந்தார். ஜூலை 11ம் தேதி (வியாழக்கிழமை) பகல் 2 மணி அளவில், நண்பர் வெங்கடேசுடன் மோட்டார் சைக்கிளில் மீன் பண்ணைக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பினார்.

அப்போது, அங்கு காரில் இருந்து ஓடி வந்த மர்ம நபர்கள் திடீரென்று மாதேஷை அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மாதேஷ் அங்கிருந்து ஓடினார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தனர். தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரணையில், சூரமங்கலத்தைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும், கொலையுண்ட மாதேசுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், டேவிட் தலைமையிலான 9 பேர் கொண்ட கும்பல்தான் மாதேஷை வெட்டிக் கொன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, மாதேஷின் மனைவி வினோதினி, தனது கணவரை டேவிட் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்று விட்டதாக சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் செந்தில் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.

Former prison warden incident;police investigation

இந்நிலையில் டேவிட் உள்பட 9 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்கள்தான் மாதேஷை தீர்த்துக் கட்டியிருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.விசாரணையில், கொலைக்கான பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறையில் கைதிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட மாதேஷ், ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்., அழகு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களை மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார். அவர்களில் சிலரை மிரட்டி விபச்சாரத் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இதில் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் மாதேசுக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த பெண் இதுகுறித்து ரவுடி டேவிடிடம் கூறினார். இதையடுத்து டேவிட், மாதேஷை எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் சொகுசு காரில் சென்றதைப் பார்த்த மாதேஷ், அந்தக் காரை தீ வைத்து எரித்திருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில்தான் அவர் முதன்முதலில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

டேவிடம் நடத்திய விசாரணையின்போது, ''வார்டன் மாதேஷ் கைதாகி சிறைக்குச் சென்றபோது, உன்னால்தான் சிறைக்குச் செல்கிறேன். வேலையும் போய்விட்டது. உன்னை கொல்லாமல் விடமாட்டேன்,'' என்று கூறி இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, டேவிடை சந்தித்து 'உன்னை போடுவேன்' என்றும் மிரட்டியிருக்கிறார். அதனால்தான் முன்னெச்சரிக்கையாக மாதேஷை தீர்த்துக் கட்டியதாக டேவிட் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

murder police Prison Salem
இதையும் படியுங்கள்
Subscribe