Skip to main content

ராஜீவ் கொலை ஆயுள் கைதிகளை விடுவிக்க முடியாது!- 2018- லேயே முடிவெடுத்துவிட்டதாக மத்திய அரசு ஆவணம் தாக்கல்!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க முடியாதென 2018- ஆம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் தெரிவித்துள்ளது.
 

ராஜீவ்கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும்  நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனு தாக்கல் செய்தார்.

former prime minister rajiv gandhi incident case chennai high court


அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக,  தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000- க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.


ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9- ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்தப்  பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
 

இன்று இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே, ஏழு பேரையும் ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்க மறுத்து குடியரசுத் தலைவர் எடுத்த முடிவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார். 
 

அவர் தாக்கல் செய்த கடிதத்தில், 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசு முடிவு குறித்து 2016- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2- ஆம் தேதியிட்டு,  தமிழக அரசு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு மத்திய அரசின் முடிவை மத்திய உள்துறை இணைச் செயலாளரான வி.பி.துபே கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழு பேரை விடுவிப்பது குறித்து முன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டுமென 2018 ஜனவரி 23-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், பரிசீலித்து முடிவெடுக்கப்பட்டது.’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மனித வெடிகுண்டின் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில். நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, காவல்துறையினர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் என்பதாலும், அந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ எதிர்ப்பதாலும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்புடன் சேந்து  கடுங்குற்றத்தைச் செய்தவர்களை விடுவித்தால், தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும், தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் மத்திய அரசு எதிர் மனுதாரராக இணைக்கப்படாத நிலையில் ஆவணத்தை தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்து நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
 

மேலும் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.