/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vp-singh-mks-art.jpg)
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் 94 வது பிறந்த தினம் இன்று (25.06.2024) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vps-art.jpg)
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து வி.பி. சிங் சிலையை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி (27.11.2023) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இவர் செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vp-singh-statue-art.jpg)
அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர் வி.பி. சிங் ஆவார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)